திருச்சியிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ளது மணப்பாறை. இங்கிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது பொன்முச்சந்தி கிராமம். இந்த ஊரில் இருந்து சுமார் ஒரு கி.மீ., தூரத்தில் உள்ள, பொன்சிங்கம்பட்டி என்ற கிராமத்தில் அந்தாள பரமேஸ்வரி சமேத முக்தீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தேவியருடன் முருகன், பைரவர் அருள்பாலிக்கின்றனர். கிரக தோஷங்கள் அனைத்தும் தீர்க்கும் திருத்தலம் இது எனப்புகழ் பெற்றது. சுமார் 1,356-ஆம் வருடம் திரிபுவனச் சக்கரவர்த்தியால் எழுப்பப்பட்ட ஆலயம் இது எனத் தெரிவிக்கிறது கல்வெட்டு, திரிபுவனச் சக்கரவர்த்தி என்பது குலசேகர பாண்டிய மன்னனைப் போற்றும் திருப்பெயர்களுள் ஒன்று என்கின்றனர், சரித்திர ஆர்வலர்கள். பிரமாண்டமான கருங்கல் திருப்பணியால் எழுப்பப்பட்ட ஆலயம் இது.