பதிவு செய்த நாள்
02
டிச
2013
11:12
திருவள்ளூர்: சிவன் கோவில்களில், சனி பிரதோஷ வழிபாடு நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவள்ளூர் தேரடி அருகே உள்ள, தீர்த்தீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திக்கும், மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின், சிறப்பு அலங்காரத்தில், திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர், ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவள்ளூரை அடுத்த பூங்காநகர் சிவா விஷ்ணு கோவிலில், புஷ்பவனேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், அதை தொடர்ந்து, தேரில் அம்பாளுடன் உற்சவர் புஷ்பவனேஸ்வரர் கோவிலில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது.இதே போல், மணவாள நகர், கன்னையா நகர், மங்களேஸ்வரர் கோவில், உட்பட, சிவன் கோவில்களில், மகா பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை, வாடாவல்லி சமேத விசாலீஸ்வரர் கோவிலில், நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், வாசனை திரவியங்கள், சொர்ணம், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவையால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், உற்சவர் கோவில் வளாகத்தில் உலா வந்தார்.இதேபோல், அத்திமாஞ்சேரிபேட்டை கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், பொதட்டூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவில், வங்கனூர் வியாசேஸ்வரர் மலைக்கோவில், மட்டவலம் கோவச்சநாதேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களிலும், பிரதோஷ விழா நடந்தது.
திருத்தணி: திருத்தணி அடுத்த, நாபளூர் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை, 4:30 மணிக்கு, நந்தி பகவானுக்கு விபூதி, பன்னீர், பால், தயிர், இளநீர் பஞ்சாமிர்தம், மாவுபொடி, எலுமிச்சை, தேன் மற்றும் நாட்டு சர்க்கரை போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.தொடர்ந்து, வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, கோமாதாவுடன் உற்சவர் அகத்தீஸ்வரர் கோவில் வளாகத்தை மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதே போல், திருத்தணி நந்தி ஆற்றங்கரையோரம் உள்ள வீரட்டீஸ்வரர், அகூர் அகத்தீஸ்வரர், கே.ஜி.கண்டிகை மலையில் உள்ள சித்தேஸ்வரர் உட்பட அனைத்து சிவாலயங்களில் சனிப்பிரதோஷம் நடந்தது.