பதிவு செய்த நாள்
02
டிச
2013
02:12
உங்கள் ஊரிலுள்ள கோயில்களில் மாவிளக்கு, அங்கப்பிரதட்சணம் போன்ற எத்தனையோ விதமான நேர்ச்சைகளை செய்திருப்பீர்கள். ஆனால், சபரிமலை அருகி<லுள்ள ஒரு கோயிலில் படகோட்டிகளுக்கு விருந்து படைப்பதே நேர்ச்சையாக <உள்ளது. மத்திய திருவிதாங்கூரில் பாண்டவர் கோயில்கள் என்று புகழப்படுகின்ற ஐந்து முக்கிய விஷ்ணு கோயில்கள் உள்ளது. அவை திருச்சிகாற்று, திருப்புலியூர், திருஆரன்முளா, திருவன்வண்டூர், திருக்கொடித்தானம் ஆகியவையாகும். இதில் திருஆரன்முளா என்ற ஆரன்முளா பார்தத்சாரதி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
தென்னகத்தின் கங்கை என்று புகழப்படும் பம்பை நதிக்கரையில் இந்த கோயில் அமைந்துள்ளது. பாண்டவர்களில் மூன்றாமவரான அர்ஜூனன் பூஜை செய்து வந்த பார்த்தசாரதி விக்ரகம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நான்கு கைகளுடன் பகவான் சங்கு, சக்கரம், அதை, பம்மம் ஏந்தி நிற்கிறார். ஆறுமுனைகள் கொண்ட வள்ளத்தில் (சிறுபடகு) பகவான் வந்து இங்கு குடிகொண்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த அடிப்படையில்தான் இந்த இடம் ஆரன்முளா என்று பெயர் பெற்றது. பகவான் படகில் வந்ததால் ஆரன்முளாவில் படகுபோட்டி மிகவும் பிரசித்தி பெற்றதாக அமைந்துள்ளது. இந்த கோயில் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலையில் ஐந்து மணி முதல் எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும். சர்க்கரை பாயாசம், அரவணை பாயாசம், பால்பாயாசம், அப்பம், சகஸ்ர அர்ச்சனை, துலாபாரம் போன்றவை முக்கிய வழிபாடுகளாகும்.
வள்ளசத்ய : இங்கு முக்கிய நேர்ச்சையாக வள்ளசத்ய (வள்ளங்களுக்கு விருந்து) உள்ளது. ஒரு பக்தர்தனது நேர்ச்சைக்காக இந்த பகுதியில் உள்ள 36 படகுக்காரர்களில் ஒருவரை இதற்கு அழைக்க வேண்டும். அவருக்கு விருந்து வைக்க வேண்டும். அக்காலத்தில் சுமார் நூறு படகோட்டிகள் இருந்தார்களாம். அவர்கள் அனைவருக்கும் நேர்ச்சைக்காரர் விருந்து அளிக்கப்பட்டதாம். ஆவணிமாதத்தில் நடக்கும் உத்திரட்டாதி வள்ளங்களி (படகுபோட்டி) மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மண்டல பூஜை தினத்தில் பகவான் ஐயப்பனுக்கு சார்த்தும் தங்க அங்கி இங்கிருந்து எடுத்து செல்லப்படுகிறது. கோயிலுக்கு சொந்தமாக 2 யானைகள் உள்ளது. தைமாதம் 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. ஐயப்பனின் தங்க அங்கி ஊர்வலம் சபரிமலைக்கு செல்லும் போது இங்கும் வந்து செல்லும்.