பந்தளத்திலிருந்து திருவாபரணம் புறப்பட்டது சன்னிதானத்தில் சுத்திக் கிரியைகள் தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2025 06:01
சபரிமலை; ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறக்க, பக்தர்களின் சரண கோஷம் விண்ணைத் தொட பந்தளத்தில் இருந்து திருவாபரன பவனி இன்று மதியம் புறப்பட்டது. சன்னிதானத்தில் சுத்திகிரியைகள் நேற்று மாலை தொடங்கியது.
பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நாளில் ஐயப்பன் விக்கிரகத்தில் அணிவிக்கும் ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டுவரப்படுகிறது, சபரிமலையில் குடிகொண்ட ஐயப்பனை காண பந்தள மன்னர் வரும்போது ஏராளமான நகைகள் கொண்டு வந்ததை நினைவு கூரும் வகையில் இந்த திருவாபரண பவனி நடைபெறுகிறது. இன்று அதிகாலை 5:00 மணி முதல் பந்தளம் வலியக்கோயிக்கல் சாஸ்தா கோயிலில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்ட திருவாபரணங்களை ஏராளமான பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று தரிசனம் நடத்தினர். மதியம் 12:30 மணிக்கு பின்னர் திருவாபரண பவனி புறப்படுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியது.
பேடகங்கள் அடைக்கப்பட்டு கோயிலில் உச்ச பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனைக்கு பின்னர் பந்தளம் ராஜ பிரதிநிதி ராஜராஜ வர்மாவுக்கு உடைவாள் வழங்கப்பட்டதும், திருவாபரண பேடகங்கள் கங்காதரன் குருசாமி குழுவினரின் தலையில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கோயிலில் இருந்து திருவாபரண பேடகங்கள் வெளியே வந்த போது ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறந்தது. பக்தர்களின் சரண கோஷம் விண்ணை தொடும் அளவு எழுந்தது. தொடர்ந்து திருவாபரண பவனி புறப்பட்டது. நேற்று அயிரூர் புதிய காவு கோயிலில் தங்கிய பவனி இன்று ளாகா வனத்துறை சத்திரத்தில் தங்கும். நாளை காலை இங்கிருந்து புறப்பட்டு பிலாப்பள்ளி, அட்டத்தோடு, வலியானவட்டம், சிறியான வட்டம், நீலிமலை வழியாக சரங்குத்திக்கு மாலை 5:30 மணிக்கு வந்தடையும். மாலை 6:30 மணிக்கு ஐயப்பன் விக்ரகத்தில் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை முடிந்த சில வினாடி நேரங்களில் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி மூன்று முறை காட்சி தரும். இதை கண்டு தரிசிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சன்னிதானத்தில் கூடியுள்ளனர். மகரஜோதி பூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் சுத்தி கிரியைகள் நேற்று சன்னிதானத்தில் தொடங்கியது. நேற்று மாலையில் தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் பிராசாத சுத்திகிரியை பூஜைகளை நடத்தினார். நாளை மதியம் உச்ச பூஜைக்கு முன்னால் பிம்பசுத்தி பூஜைகள் நடைபெறும்.
பம்பையில் நாளை மதியம் அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்கள் மற்றும் அங்கு குழுமியுள்ள பக்தர்களின் பம்பை விருந்தும், அதைத்தொடர்ந்து மாலையில் பம்பை நதியில் பம்பை விளக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.