திருநெல்வேலி: பாளை.யில் பேராலய திருவிழாவை முன்னிட்டு, சவேரியாரின் திருவுருவப்பவனி நடந்தது. பாளை.சவேரியார் பேராலயத்தில் 10 நாள் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிலிருந்து தினமும் காலை, மாலை வேளைகளில் திருப்பலி, மறையுரை நடந்து வருகிறது. மேலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. கடந்த 30ம் தேதி ஆலயத்தில் அசனம் நடந்தது. விழாவில் 9வது நாளான நேற்று காலை கல்லிடைக்குறிச்சி பங்குத்தந்தை ரெக்ஸ் ஜஸ்டின் திருப்பலியும், பீட்டர் பிச்சைக்கண் மறையுரையும் நடந்தது. மாலையில், கோவில்பட்டி வட்டாரம் மாசில்லாமணி, குழந்தைராஜ், இருதய நகர் எரிக் ஜோ திருப்பலியும், சேவியர் டெரன்ஸ் மறையுரையும், மலையன்குளம் பங்குத்தந்தை விக்டரின் மாலை வழிபாடு நடந்தது. தொடர்ந்து சவேரியாரின் திருவுருவப்பவனி நடந்தது. கோயில் வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புறப்பட்ட சவேரியாரின் பவனி, தெற்கு பஜார் வழியாக பல்வேறு முக்கிய வீதிகளில் வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் சவேரியார் ஆலய உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.