வானமாமலை மடம் ஜீயர் சுவாமிகளுக்கு மதுரையில் பூரண கும்பத்துடன் வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜன 2026 02:01
மதுரை: மதுரை வந்த வானமாமலை மடம் ஜீயர் சுவாமிகளுக்கு நேற்று பூரண கும்பத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுரையை அடுத்துள்ள கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா ஜன. 28ல் நடக்கிறது. அதில் பங்கேற்க நாங்குநேரி வானமாமலை மடம் மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள்,நேற்று மாலை மதுரை வந்தார்.
அவருக்கு எஸ்.எஸ்.காலனி பிராமண கல்யாண மண்டபத்தில், வரவேற்பு குழுத் தலைவர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
ஜீயர் சுவாமிகள் கூறுகையில் ‘‘கொந்தகை கிராமத்தில் மணவாளமாமுனிகள் தென்னாச்சாரியார்களுக்கு ஒரு ஆச்சாரியார், அவருக்கு ஆச்சாரியராக இருந்த திருவாய்மொழி பிள்ளை அவதாரம் செய்த ஸ்தலம். அங்கு ஜன. 28ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. அதில் பங்கேற்றால் அனைவரும் சரணாகதி ஆவதுடன் மோட்சம் பெறலாம்’’ என்றார்.
குழு நிர்வாகிகள் ரங்கராஜன், நம்பி ஸ்ரீனிவாசன், முகுந்தராஜன், ராமானுஜம், ராஜகோபால், அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு பங்கேற்றனர். இன்று (ஜன.26) காலை 9:00 மணிக்கு பிராமண கல்யாண மண்டபத்தில் பக்தர்களுக்கு சுவாமிகள் ஸமாஸ்ரயணம் செய்து வைக்கிறார். மாலை 5:00 மணிக்கு திருமோகூர் காளமேக பெருமாள் கோயிலுக்கு செல்கிறார்.
நாளை காலை 8:00 மணிக்கு அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில், மாலை 6:00 மணிக்கு கூடலழகர் பெருமாள் கோயில் செல்கிறார். ஜன. 28 காலை 7:00 மணிக்கு கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கிறார். ஏற்பாடுகளை வரவேற்பு கமிட்டி தலைவர் ராமகிருஷ்ணன் செய்துள்ளார்.