பதிவு செய்த நாள்
11
டிச
2013
10:12
திருப்பதி: திருமலையில் பக்தர்களின் தேவைக்கு ஏற்ப, லட்டு வழங்க வேண்டும் என, திருமலை - திருப்பதி தேவஸ்தானத்திடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது. திருமலையில் தரிசனம் முடித்து வெளியே வரும் போது, இரண்டு; கோவிலுக்கு வெளியே உள்ள லட்டு கவுன்டர்களில் கூடுதலாக, நான்கு என, ஒருவருக்கு, தற்போது, ஆறு லட்டுகள் வழங்கப்படுகின்றன. லட்டுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது, கூடுதல் லட்டு கவுன்டர்கள் மூடப்படுகின்றன. எனவே, கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்கள், இடைத்தரகர்களை நாடுகின்றனர்.
5 லட்சம் லட்டு: ஐந்து ஆண்டுகளுக்கு முன், நாள் ஒன்றுக்கு, ஐந்து லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படும் என, தேவஸ்தானம் அறிவித்தது. ஆனால், இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. கோவிலுக்குள் உள்ள, லட்டு மடப்பள்ளியை விரிவுபடுத்த முடியவில்லை. எனவே, 5 கோடி ரூபாய் செலவில், பூந்தி தயாரிப்பு கூடம் கோவிலுக்கு வெளியே ஏற்படுத்தப்பட்டது. தயாரான பூந்தி, மீண்டும் கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு, லட்டு தயார் செய்யப்படுகிறது.
கன்வேயர் பெல்ட்: பூந்தியை, மடப்பள்ளிக்குள் அனுப்பவும், தயார் செய்த லட்டுக்களை வெளியே கொண்டு வரவும், 5 கோடி ரூபாய் செலவில், கன்வேயர் பெல்ட் வசதிக்கு தேவஸ்தானம் ஏற்பாடு செய்தது. இதன்பின், பரிந்துரை கடிதங்களுக்கு, லட்டு வழங்குவதை ரத்து செய்து, கோவிலுக்கு வெளியே, கூடுதல் லட்டு கவுன்டர்கள் ஏற்படுத்தப்பட்டன. ஒருவருக்கு, நான்கு லட்டு வீதம், பக்தர்களுக்கு நேரிடையாக விற்பனை செய்யப்படுகிறது.
கூடுதல் கவுன்டர்: தேவஸ்தானம், இத்தனை முயற்சிகளை எடுத்த போதிலும், நாள் ஒன்றுக்கு, 2.5 முதல், 3 லட்சம், லட்டுகள் வரையே தயாரிக்க முடிகிறது. தினமும் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு, 1.5 லட்சம் லட்டுகள்; கோவிலுக்கு வெளியே கூடுதல் கவுன்டர்களில், ஒரு லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ள நாட்களில், லட்டுகள் விரைவாக விற்பனையாகி விடுகின்றன; மதியமே கவுன்டர்கள் மூடப்படுகின்றன. இதனால், லட்டு கிடைக்காமல் பக்தர்கள் வேதனையடைகின்றனர். திருமலையில் இருந்து, மற்ற மாநிலங்களில் உள்ள, தேவஸ்தான விசாரணை மையங்களில் விற்பனை செய்ய, மாதத்திற்கு, 1.29 லட்டுகள் அனுப்பப்படுகின்றன. லட்டு தயாரிப்பை அதிகப்படுத்தும் வரை, இவற்றை திருமலையில் விற்பனை செய்தால், லட்டு தட்டுப்பாடு சிறிதளவு குறையும் என, பக்தர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், ஏழுமலையான் கோவிலில் உள்ள, லட்டு மடப்பள்ளியை விரிவுபடுத்தி, கூடுதலாக ஊழியர்களை பணியில் அமர்த்தி, தினமும், ஐந்து லட்சம் லட்டுக்களை தயார் செய்தால், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்றும், பக்தர்கள் கூறுகின்றனர்.