பதிவு செய்த நாள்
12
டிச
2013
10:12
உடன்குடி: தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயில் கள்ளர்வெட்டு திருவிழா வரும் டிச-16ம் தேதி நடக்கிறது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் போட்டி போட்டு புனித மணல் எடுக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், உடன்குடி பஞ்., யூனியனுக்கு உட்பட்ட தேரிக்குடியிருப்பு அருகேயுள்ள குதிரைமொழி தேரியில் அமைந்துள்ளது கற்குவேல் அய்யனார் கோயில். இந்த கோயிலை சுற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க செம்மண் தேரிகுன்றுகள் அரண் போலவும்,கோட்டைச்சுவர் போலவும் அமைந்தள்ள காட்சி கண்கொள்ள காட்சியாகும்.எழில் கொஞ்சும் வனப்பகுதியில் அய்யனின் அருள் ஒரு காட்டாற்று வெள்ளம் போல் ஆனந்த வீச்சுடன் வெளிப்பட்டு அய்யனின் பொற்பாதம் பற்றிய அனைவரையும் தழைத்துச் செழிப்படையச் செய்கிறது.அய்யன் இருதேவியருடன் அமா"ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.
அய்யன் மட்டுமல்லாத பேச்சியம்மன்,சுடலைமாடன்,பெரியாண்டவர், வன்னியராஜா,பொன்காத்த அய்யன் போன்ற ஏராளமான வன தேவதைகளுடன் காட்சியளிக்கிறார். கற்குவா என்ற மரத்தில் அய்யன் தோன்றி அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டியதால் கற்குவா அய்யன் என்றழைக்கப்பட்டார்.இச்சொல் காலப்போக்கில் கற்குவாலய்யன்,கற்குவெலய்யன்,கற்குவாள் அய்யன்,கற்குவாலை அய்யன்,கற்கோலய்யன் என பலவாறாக மருவிற்று. அநீதிகள் தலைதூக்கிய போது அதனை அழித்து நீதியை நிலை நிறுத்தினார் அய்யன்.அந்த நாளே கள்ளர்வெட்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் முதல் நாளில் துவங்கும் இத்திருவிழாவின் முப்பதாவது நாளில் கள்ளர்வெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி துவங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அன்னதானம் மற்றும் வில்லிசை நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நாட்களான வரும் 14-ந் தேதி காலை 11 மணிக்கு ஐவராஜா - மாலையம்மன் பூஜையும், மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை நடக்கிறது. 15-ந் தேதி காலை 10 மணிக்கு மகளிர் வண்ண கோலமிடும் நிகழ்ச்சியும், காலை 11 மணி மற்றும் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு 7.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 9 மணிக்கு உற்சவர் திருவீதியுலா ஆகியன நடக்கிறது.
16-ந் தேதி காலை 6 மணிக்கு 108 பால்குடம் எடுத்து வருதல், 9 மணிக்கு தாமிரபரணி தீர்த்தம் வெள்ளி குடத்தில் எடுத்து வருதல், காலை 10 மணிக்கு பேச்சியம்மனுக்கு முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.நண்பகல் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் முன்னதாக காலை 9 மணி, நண்பகல் 12 மணி, மாலை 5 மணி ஆகிய நேரங்களில் சமயசொற்பொழிவும் பகல் 10 மணிக்கு விளாத்திகுளம் ராஜலெட்சுமி குழுவினரின் வில்லிசையும் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாலை 4 மணிக்கு சுவாமிகள் கள்ளர்வெட்டு நிகழ்ச்சிக்கு புறப்பட்டு செல்வதும், மாலை 4.30 மணி அளவில் கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மணல் தேரிக்குன்றில் கள்ளர்வெட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.இதைக்காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருப்பார்கள். கள்ளர்வெட்டு நடந்ததும் கள்ளர்வெட்டு நடந்த இடத்தில் இருந்து பக்தர்கள் போட்டிபோட்டு மணல் எடுப்பார்கள்.இதை புனித மணல் என்பர். இந்த மணலை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள். புதியதாக தொழில் தொடங்கும் போதும், நல்ல காரியங்கள் நடக்கும் போதும் இந்த மணலை பயன்படுத்துவர். உடல் நலக்குறைவு ஏற்பட்டால் இந்த மணலை தண்ணீரில் கரைத்து உடலில் பூசுவர். இதை தொடர்ந்து வானவேடிக்கை, இரவு 8 மணிக்கு நகைச்சுவை பட்டிமன்றம் ஆகியன நடக்கிறது. பக்தர்கள் வந்து செல்ல வசதியாக திருச்செந்தூரில் இருந்து கோவில் வரை சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படும். ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை இணைஆணையர் அன்புமணி, தூத்துக்குடி உதவி ஆணையர் செல்லத்துரை, கோவில் தக்கார் சிவக்குமார், நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் செய்துவருகின்றனர்.