உத்தரகோசமங்கை கோயிலில் சிறப்பு தரிசனம் செய்பவர்களுக்கு விலையில்லா சந்தனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2013 04:12
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் டிச., 17ல் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில், 100 ரூபாய் டிக்கெட் பெற்று சிறப்பு தரிசனம் செய்பவர்களுக்கு விலையில்லா சந்தனம் வழங்கப்படும் என திவான் மகேந்திரன் தெரிவித்தார். உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் வளாகத்தில் நடராஜர் கோயில் உள்ளது. இங்கு மரகதத்திலான நடராஜர் சிலை உள்ளது. ஆதி சிதம்பரம் என்றழைக்கப்படும் இந்த கோயிலில் சிவ பெருமான், பார்வதிக்கு தனி அறையில் நடனமாடிய இடம் எனவும் கூறப்படுகிறது. ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு காட்சியளிக்கும் நடராஜர் சிலை சிவனுக்கு உகந்த நாளான ஆருத்ரா தரிசனத்தையொட்டி சந்தனக்காப்பு கலையப்படும். சுவாமியின் மேனியில் பூசப்பட்ட சந்தனம் மருத்துவகுணம் நிறைந்ததாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த சந்தனத்தை சிறிது நீரில் கலந்து குடித்தால் புத்திர பாக்கியம் கிடைப்பதுடன் உடலில் உள்ள நோய்களும் கரைந்து விடுவதாக பக்தர்களின் நம்பிக்கை. ஆகவே இந்த சந்தனத்தை பெற, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர். கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் ரூ.100 செலுத்தி சிறப்பு சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு விலையில்லா சந்தனம் வழங்கப்படுகிறது.
கோயில் திவான் மகேந்திரன் கூறியதாவது: ஆருத்ரா தினத்தில் பக்தர்கள் இடையூறு இல்லாமல் தரிசனம் செய்யும் வகையில் இலவச தரிசனம், 10 ரூபாய்,100 ரூபாய் என மூன்று பிரிவுகளாக மரத்தடுப்புகள் அமைத்து சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நடராஜருக்கு சாத்தப்படும் சந்தனத்தை விற்கக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 100 ரூபாய் தரிசன டிக்கெட் பெற்று சிறப்பு தரிசனம் செய்பவர்களுக்கு விலையில்லா சந்தனம் வழங்கப்படும். ஆருத்ரா தரிசன விழாவிற்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கவும்,கோயில் வளாகத்தில் கடைகள் வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது,என்றார். கூடுதல் தகவல்களுக்கு 94431 31215 என்ற மொபைலை அழைக்கலாம்.
துளிகள்: *கடந்தாண்டு ஆருத்ரா தரிசன தினத்தில் மழை பெய்ததால், பக்தர்கள் மழையில் நனைந்து சுவாமியை தரிசிக்கச் சென்றனர். * நடப்பாண்டிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதால் கோயில் நிர்வாகம் நடராஜர் சன்னதி அருகே பந்தல் அமைக்க முன் வர வேண்டும். *போலி சந்தன விற்பனையை கண்காணிக்க போலீசார் தனிப்படை ஏற்படுத்த வேண்டும்.