பதிவு செய்த நாள்
13
டிச
2013
10:12
சபரிமலை: சபரிமலையில் 26ம் தேதி நடைபெறவுள்ள மண்டல பூஜையை முன்னிட்டு, 22ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து தங்க அங்கி பவனி புறப்படுகிறது. சபரிமலையில் மண்டலபூஜை, 26ம் தேதி நடைபெறுகிறது. இந்நாளில் அய்யப்பனுக்கு அணிவிக்க, திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா, தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது, மண்டலபூஜைக்கு முந்தைய நாளிலும், மண்டலபூஜை நாளிலும் அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும். பத்தணந்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி, ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக, பவனியாக எடுத்து வரப்படுகிறது. சபரிமலை மாதிரியில் வடிவமைக்கப்பட்ட ரதத்தில் அங்கி வைக்கப்பட்டு, வழிநெடுகிலும் பக்தர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. வரும் 22ம் தேதி காலை, 6:00 மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலிலிருந்து இந்த பவனி, பலத்த பாதுகாப்புடன் புறப்படுகிறது. இந்த பவனி, 25ம் தேதி மதியம், பம்பை வந்தடையும். பம்பை கணபதி கோவில் அருகில், பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும் இந்த அங்கி, மாலை, 3:00 மணிக்கு தலைச்சுமடாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்படும். வரும், 25ம் தேதி மாலை, 6:30 மணிக்கு, தங்க அங்கி சார்த்தி தீபாராதனை நடைபெறும். 26ம் தேதி மண்டலபூஜை நேரத்திலும் அய்யப்பனுக்கு இந்த அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும். தங்கஅங்கி பவனி ஏற்பாடுகள் குறித்து, பத்தணந்திட்டை கலெக்டர் தலைமையில் 16ம் தேதி அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.