பதிவு செய்த நாள்
13
டிச
2013
10:12
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலில், பல கோடி ரூபாய் மதிப்பில் ராஜகோபுரத் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், அமைச்சர்களின் வருகைக்காக கும்பாபிஷேக விழா நடத்தப்படாமல், காலம் கடத்தப்பட்டு வருகிறது. பக்தர்களின் கோரிக்கையை அடுத்து 2007 அக்., 17ல் கோனியம்மன் கோவில் ராஜகோபுர திருப்பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மண் ஆய்வு உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடந்தன. ஐந்து நிலைகளில் கோபுரம் அமைத்தால்போதும் என, அறநிலையத்துறையும், கோவில் நிர்வாகமும் முடிவு செய்தன. அதன் பின், ஏழு நிலைகளில் கோபுரம் அமைக்க வேண்டும் என்று பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில், ஏழு நிலை ராஜகோபுரமாக மாற்றப்பட்டது. அதே போல், ஒன்பது கோபுர கலசங்கள் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர். அதன்படி, ஒன்பது வரிசைகளில் கோபுர கலசங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், ராஜகோபுரத்திருப்பணிகள் வேகமாக நடந்தன.
தரைப்பகுதியிலிருந்து 11 அடி ஆழத்தில், கான்கிரீட் அஸ்திவாரம் அமைக்கப்பட்டது; 14 வரிகளுக்கு கல்காரத்திருப்பணிகளும் செய்யப்பட்டன. அதன் பின், ஏழு நிலைகளில் செங்கற்களால் சுதைவேலைப்பாடுகள் நிறைவடைந்து, சுவாமி உருவங்கள் மீது வர்ணம்பூசும் பணிகளும் நிறைவடைந்து விட்டன.
கல்காரத்திருப்பணிகள் 27 அடிக்கும், சுதை வேலைப்பாடுகள் 66 அடி உயரத்துக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தரை மட்டத்திலிருந்து 93 அடி உயரத்துக்கு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் வலது ஓரத்தில் பக்தர்கள் உள்ளே சென்று வருவதற்கு, கான்கிரீட் தூண்களால் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேற்பகுதியில், பிரபாவளி அமைத்து, அம்மனின் சுதை சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு, அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டன. இதுவரை ராஜகோபுர திருப்பணிக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி, பக்தர்கள் கோவில் ராஜகோபுரப்பணிக்கு உபயமாக கொடுத்த தொகையிலிருந்து செலவு செய்யப்பட்டுள்ளது. கோவை மக்கள் கோனியம்மன் மீது கொண்ட பக்தியின் காரணமாக, வரையறை ஏதும் நிர்ணயிக்காமல், கோவில் சார்பில் கேட்டபோதெல்லாம் ரொக்கமாகவும், பொருளாகவும் ராஜகோபுரத்திருப்பணிக்கு, ஆறு ஆண்டுகளாக வாரி வழங்கினர். திருப்பணிகள் நிறைவடைந்து, ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ஆனால், கும்பாபிஷேகத்துக்கு அமைச்சர்களிடம் தேதி கிடைக்காமல், ராஜகோபுர கும்பாபிஷேக விழா நாட்கள் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது. கோவையில் உள்ள அறநிலையத்துறை உயர் அதிகாரியிடம் கேட்டபோது,கும்பாபிஷேகத்துக்கு தேதி கேட்டு சென்னைக்கு நடையாய் நடக்கிறோம்; அடிக்கடி தொடர்பு கொண்டு கேட்கிறோம். ஏற்காடு இடைத்தேர்தல் முடியட்டும்; தேதி கொடுக்கிறோம் என்று கூறினர். தேர்தலும் முடிந்துவிட்டது. கும்பாபிஷேக விழா பிரமாண்டமாக நடத்த வேண்டும். அதில், எப்படியும் மூன்று அமைச்சர்கள் பங்கேற்பர்; அதற்காக தேதி கேட்டு காத்திருக்கிறோம் என்றார்.