வள்ளியூர்: வள்ளியூர் சாமியார்பொத்தை ஸ்ரீபுரம் முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜையை முன்னிட்டு நேற்று கிரிவல தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. வள்ளியூர் பொதிகை மலைத்தொடர் பொத்தை மலையடிவாரம் சாமியார் பொத்தையில் 19ம் நூற்றாண்டில் சுமார் 179 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீமுத்துகிருஷ்ணசுவாமி ஜீவன்முக்தர் ஆவார். அவர் ஓர் சாமுசித்தர் ஆவார். சாமுசித்தர் என்றால் ஓதாமல் உணர்ந்தவர் பிற்பிறப்பு இல்லாதவர் என்பது பொருளாகும். முத்துகிருஷ்ண சுவாமி அகஸ்தியரின் அம்ச அவதாரமாகும். முத்துகிருஷ்ண சுவாமி 179ம் வயதில் 1913ம் ஆண்டு கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசியன்று ஜீவசமாதியடைந்தார். ஜீவசமாதியடைந்த சாமியார் பொத்தையில் ஸ்ரீபுரம் மண்டபத்தில் அவரது ஆணைப்படி மகாமேரு மண்டபத்தில் அருள்பாலித்து வருகிறார். குருநாதர் அருளோடு பூஜ்யஸ்ரீமாதாஜி வித்தம்மா தலைவியாக முத்துகிருஷ்ணசுவாமி மிஷன் டிரஸ்ட் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நடக்கும் கார்த்திகை மாதம் குருபூஜை மற்றும் குருஜெயந்தி விழாவும் நடந்து வருகிறது. சாதாரணமாக எல்லா இடங்களிலும் இறைவனுக்கு மட்டுமே தேர் உண்டு.
விதிவிலக்காக விசேஷமாக அடியார்களான ஆவுடையார் கோயிலில் மாணிக்கவாசகருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கும், ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜருக்கும் தேர் உண்டு. அந்த வகையில் நான்காவதாக அகஸ்திய முனிவர் அம்ச அவதாரமான முத்துகிருஷ்ண சுவாமிக்கும் தேர் செய்திருப்பது சிறப்பாகும். அதன்படி கடந்த 2007ம் ஆண்டு முதல் பொத்தை மலையை சுற்றி கிரிவல தேரோட்டம் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் குருஜெயந்தி விழா இந்த ஆண்டு கடந்த 6ம் தேதி வனவிநாயகருக்கு சிறப்பு பூஜையுடன் 100வது குரு பூஜை விழா துவங்கியது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் 7ம் திருவிழாவான நேற்று பொத்தையை சுற்றி கிரிவல தேரோட்டம் நடந்தது. காலை 5.45 மணிக்கு ‹ட்டுபொத்தை அடிவாரத்தில் உள்ள வனவிநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. காலை 6 மணிக்கு முத்துகிருஷ்ண சுவாமி தேரில் எழுந்தருளினார். தேரை பூஜ்யஸ்ரீமாதாஜி வித்தம்மா வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். தேரோட்டத்தின் போது ஆங்காங்கே சித்ரா விஸ்வேஷ்வரன் நெரியாள்கையில் லலிதா கலாமந்திர் மாணவ, மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ட்டுபொத்தையை சுற்றி சுமார் 5 கி.மீ.,தொலைவிற்கு பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்று 11 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. பின்பு பக்தர்களுக்கு பூஜ்யஸ்ரீமாதாஜி வித்தம்மா அருளாசி வழங்கினார். அதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடந்தது. மாலை 5.30 மணிக்கு முத்துகிருஷ்ணா சித்ரகூடத்தில் சிறப்பு பூஜையும், பஜனையும், 6.30 மணிக்கு விஜய்சிவா வழங்கிய குரலிசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாதாஜி வித்தம்மா பக்தர்களுக்கு அருளுரை வழங்கினார். இன்று (13ம் தேதி) குருபூஜையும், வரும் 15ம் தேதி குரு ஜெயந்தி விழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை மாதாஜி வித்தம்மா தலைமையில் முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.