*பணம் அதிகாரத்தைப் பெற ஆசையை ஏற்படுத்துகிறது. அதைப் பெற்றிருப்பவனை மற்றவர்களின் துன்பங்களுக்கு இரங்காத இதயமற்றவனாக ஆக்கிவிடுகிறது. *கவலைக்கு ஒரு பிரச்னையை எப்படி விட்டொழிப்பது எனத் தெரியாது. பய உணர்வில் சிக்கிக்கொண்டுள்ள உணர்வு நிலையே கவலை. *ஒரு பிரச்னைக்குத் தீர்வு தெரியாமல் கவலைப்படுவதால் தான் தலைவலி, நரம்புத் தளர்ச்சி, இருதயக்கோளாறு போன்ற பிரச்னைகளை ஏற்படுகின்றன. *பிரச்னைக்குத் தீர்வு காண அதிலுள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்து சிறந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். *தன்னலமற்றவர்களிடம் பணம் இருந்தால் அது வரப்பிரசாதம். சுயநலக்காரர்களின் கையில் இருந்தால் அது ஒரு சாபக்கேடு. *தங்கம் நமது உபயோகத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது பரமனைத்தவிர வேறு எவருக்கும் சொந்தமில்லை. *வெற்றியோ அல்லது தோல்வியோ, உங்கள் சொந்த மனத்திலே தான்தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் மீது நீங்கள் அளிக்கும் சொந்தத் தீர்ப்பே உங்களை ஏழையாகவோ அல்லது கவலையற்றவனாகவோ வைக்கிறது. *ஒவ்வொரு முறை நீங்கள் கவலைப்படும்போதும் ஒரு மன வேகத்தடையை ஏற்படுத்துகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கவலை என்பது உங்கள் முயற்சிகள் என்னும் சக்கரங்களின் மீது செலுத்தப்படும் பிரேக். அதுஉங்களை முழு நிறுத்தத்திற்கு கொண்டு வருகிறது. *சோம்பேறியாக இருப்பதைவிட அதிக பிரயத்தனம் செய்பவனாக இருந்து எதையாவது சாதிப்பது நல்லது. சோம்பேறி யானவன்இறைவனாலும் மனிதனாலும் கைவிடப் படுகிறான். உழைப் பாளிகள் அவர்களால் உற்சாகப்படுத்தப்படுவார்கள். *பணம் மனநிறைவை அளிக்காது. அதை சம்பாதிக்க மேற்கொள்ளப்படும் திறன்தான் மனநிறைவை அளிக்கிறது. *உங்கள் கவலைகளிலிருந்து தப்பி ஓடிப்போக முடியாது. ஏனெனில் நீங்கள் எங்கு சென்றாலும் கவலைகளும் கூடவே வருகின்றன. *நான் எவருக்கும் தீங்கிழைக்கவில்லை என்று ஒருவன் தனக்குத்தானே சொல்லிக்கொள்ள முடிந்தால், அவனே இப்புவியில் மிகவும் மகிழ்ச்சியானவனாக இருப்பான். *உங்கள் பிரச்னைகளைப் பயமின்றியும் தெளிவான மனசாட்சியுடனும் எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். *எல்லோரும் உங்களுடைய நண்பராக இருக்க விரும்பாவிட்டாலும் நீங்கள் பதிலுக்கு எதையும் எதிர்பாராமல் எல்லோருடனும் நட்பாக இருக்க வேண்டும். *உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் சிலர் துரோகம் இழைத்தாலும் கவலைப்படாமல் நீங்கள் நீங்களாகவே இருங்கள். *எப்போதும் கடவுளிடம் செல்வம், வசதிவாய்ப்பு, சந்தோஷம் போன்றவற்றையே கேட்டுக் கொண்டிருக்கிறோம். கடவுளின் சாம்ராஜ்யமே நமக்குரியது தான். அதனால், அழிந்து போகும் நிலையில்லாத பொருட்களை அவரிடம் கேட்பதை கைவிடுவோம். *சிறிய பொருட்களைத் தேடுவதில் நேரத்தை செலவழிக்கவேண்டாம். கடவுள் ஒருவரே மிக உயர்ந்த பரிசு. *சுயநலம் என்பது அறவே கூடாது. மற்றவர்களுக்கு நம்மால் இயன்ற மகிழ்ச்சியை அளிக்க முயலவேண்டும். இந்த எண்ணம் உண்டாகி விட்டால், நீங்கள் கடவுளுக்கு நெருக்கமான மனிதராக ஆகி விடுவீர்கள். -யோகானந்தர்