பதிவு செய்த நாள்
16
டிச
2013
11:12
சென்னை: இறைவனே இந்த உலகின் முதல் என்.ஜி.ஓ., என, வேதாத்திரி மகரிஷி ஆஸ்ரம நிறுவனர், அழகர் ராமானுஜம் பேசினார். ராமகிருஷ்ணா மடம் சார்பில், சுவாமி விவேகானந்தரின், 150வது பிறந்த நாள் விழா நேற்று, சென்னை, மயிலாப்பூரில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, "எண்ணங்களின் சங்கமம் என்ற, 800 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின், ஒன்பதாம் ஆண்டு விழாவும் நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர், வேதாத்திரி மகரிஷி ஆஸ்ரம நிறுவனர், அழகர் ராமானுஜம் பேசியதாவது: நாட்டின் புனிதத்தையும், ஆன்மிக பலத்தையும் என்றும் நிலை நிறுத்தும் அமைப்பு, ராமகிருஷ்ணா மடம். நமது இல்லத்தில் ராமனாகவும், சமுதாயத்தில் தர்மத்தை நிலை நிறுத்துகிற கிருஷ்ணனாகவும் வாழ்வதே சமூக ஆர்வலர்களின் வாழ்க்கையாக அமைய வேண்டும். விவேகானந்தருக்கும், சமூக ஆர்வலர்களுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. இறைவனுக்கு சேவை செய்வதே வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருந்த சமுதாயத்தில், சக மனிதர்களுக்கு சேவை செய்வதே வாழ்க்கை என மாற்றியவர் விவேகானந்தர். இந்த மாற்றம் தான், சமுதாய சேவையின் அடித்தளமாக விளங்குகிறது. சமூக ஆர்வலர், குடும்பத்திற்குள் மட்டுமே வலம் வரும் தொட்டில் மீன் அல்ல. அகண்ட கடலில், பரந்த வனத்தில் சஞ்சரிக்கும் மாமனிதர். அவருக்கு சிரமங்கள் வரும் போதெல்லாம், நமக்கு முன்பாக செல்கிற இறைவனை நினைத்துக் கொள்ள வேண்டும். இறைவன் தான் இந்த உலகின் முதல், என்.ஜி.ஓ.,(தன்னார்வ தொண்டு நிறுவனம்). ஏனென்றால், கடல்நீர் ஆவியாகி, அதை மழையாக பெய்ய வைப்பது அரசு அல்ல. ஆகையால், சமூக ஆர்வலர்கள் இறைவனை துணைக் கொண்டு, சமுதாயத்தில் இருக்கும் அவலங்களை தன்னால் முடிந்தளவு அகற்ற, வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். நிகழ்ச்சியில், சிறந்த, 27 தொண்டு நிறுவனங்களி"ன் செயல்பாட்டை விளக்கும் புத்தகத்தை சுவாமி கவுதமானந்தாஜி மகராஜ் வெளியிட்டார். தொடர்ந்து, கல்வி, அனாதை ஆஸ்ரமம், பெண்கள் முன்னேற்றம், மது ஒழிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தங்களது குழுவினருடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். ராமகிருஷ்ணா மடத்தின் சிறப்பான செயல்பாடு குறி"த்து, சுவாமி விமுர்தானந்தா, ஹரி ஹர சுப்ரமணியன் ஆகியோர் பேசினர். தன்னார்வ தொண்டு பணியில் சிறப்பாக பணியாற்றி வரும், காஜா மொஹிதீன், சதீஷ் அடிகளார் சிறப்பிக்கப்பட்டனர்.