பதிவு செய்த நாள்
21
டிச
2013
10:12
சென்னை: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், இறைவனுக்கு படைப்பதில், குறைபாடு இருந்ததால், நான்கு பேர் உயிர் தியாகம் செய்த குறிப்பு, அக்கோயிலில் உள்ள, 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த, கல்வெட்டில் காணப்பட்டது, என, மத்திய தொல்லியல் துறையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர், ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
21 கோபுரங்கள்: தொல்லியல் துறை சார்பில், ஒவ்வொரு மாதமும், திங்கட்பொழிவு என்ற பெயரில், தொல்லியல் குறித்த, சிறப்பு சொற்பொழிவு நடந்து வருகிறது. டிசம்பர் மாத சொற்பொழிவு, சென்னை, எழும்பூரில் உள்ள, தொல்லியல் துறை கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இதில், மத்திய தொல்லியல் துறையின், முன்னாள் துணை கண்காணிப்பாளர், ஸ்ரீதரன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வரலாற்றுப் பார்வையில், ஸ்ரீரங்கம் கோயில் என்ற தலைப்பில், பேசினார். தொல்லியல் துறை கமிஷனர் (பொறுப்பு), வசந்தி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், ஸ்ரீதரன் பேசியதாவது: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், தமிழகத்தில் உள்ள, கோயில்களில், முக்கியமானது. அக்கோயில், 21 கோபுரங்களை கொண்டதாக, விளங்கியது. அங்கு, 1947 முதல் 1967 வரையிலான, 34 ஆண்டுகள், பல்வேறு ஆய்வு கள் மூலம், 644 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இருப்பினும், பல்வேறு சிரமங்களுக்கு இடையில், 1982ல், கல்வெட்டுக்களில் காணப்படும் குறிப்புகள், புத்தகமாக வெளியிடப்பட்டது.
பண்டார ஸ்ரீ கணக்கு: இதில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில், பல்வேறு விதமான, கோயில் நிர்வாக முறைகள், வெளிச்சத்துக்கு வந்தன. சோழர், பாண்டியர் காலத்தில், கோயிலுக்கு என, தனி நிர்வாக முறை இருந்தது. சோழர் ஆட்சிக் காலத்தில், மூன்று பேர் கொண்டதாகவும், பாண்டியர் ஆட்சிக் காலத்தில், 10 பேர் கொண்டதாகவும், கோயில் நிர்வாக குழு செயல்பட்டது. கோயிலின், ஒவ்வொரு நிர்வாகத்துக்கும், வாரியங்கள் இருந்தன. இவற்றில், பண்டார வாரியம், பண்டார ஸ்ரீ கணக்கு போன்றவை குறிப்பிடத்தக்கவை. கோயிலின் ஒட்டுமொத்த நிர்வாக குழுவுக்கு, ஜீயர் தலைமை வகித்தார். இக்குழுவுக்கு என, பல்வேறு விதிமுறைகள் இருந்தன. குழு தலைவராக இருப்பவர், திவ்ய பிரபந்தம், பாசுரங்களில் நம்பிக்கை கொண்டவராகவும், துறவியாகவும் இருக்க வேண்டும்; கோயில் நிர்வாகத்தில், ஜீயர் தவறு செய்தால், அவரை கோயிலுக்குள் சேர்க்க கூடாது என, கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல், 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில், இறைவனுக்கு படைப்பதில், குறைபாடு இருந்ததால், அப்பாவு அய்யங்கார் தெற்கு கோபுரத்தில் இருந்து ஒருவரும், பெரியாழ்வார் கிழக்கு கோபுரத்தில் இருந்து ஒருவரும், கீழே விழுந்து, உயிர் தியாகம் செய்தனர். அதேபோல், இரண்டு ஜீயர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். இவ்வாறு, அவர் பேசினார்.