பதிவு செய்த நாள்
21
டிச
2013
10:12
ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தப் பகுதி, புனித நீராட தகுதியான, தூய்மையான இடமாக இல்லை. கால்களைக்கூட நனைக்க முடியாது. மாசடைந்துள்ளது, என, வக்கீல் கமிஷனர்கள், மதுரை ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல் செய்தனர். கோவை வக்கீல் வெண்ணிலா தாக்கல் செய்த பொது நல மனு: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலைச் சுற்றி கழிவுகள் தேங்கியுள்ளன. கழிவுகள் அக்னி தீர்த்தப் பகுதியில் கலக்கிறது. 22 இடங்களில் தீர்த்தமாட, புரோக்கர்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அக்னி தீர்த்தத்தை சுத்தப்படுத்த வேண்டும். கோயில் புனிதத் தன்மையை காக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். ஏற்கனவே நீதிபதிகள்,"கோயில் மற்றும் அக்னி தீர்த்தப் பகுதியை வக்கீல்கள் கமிஷனர்கள் எஸ்.எஸ்.சுந்தர், என்.கிருஷ்ணவேணி, எஸ்.சீனிவாசராகவன் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றனர். நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்தியநாதன் பெஞ்ச் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் ஆஜரானார்.வக்கீல் கமிஷனர்கள் தாக்கல் செய்த அறிக்கை: அக்னி தீர்த்தப் பகுதியில் தேங்கிய நீர், பழுப்பு நிறமாக, துர்நாற்றம் வீசுகிறது. பழைய துணிகள் தேங்கியுள்ளன. பக்தர்கள்,"சரியாக புனித நீராட முடியவில்லை என்றனர். விடுதிகள், ஓட்டல்கள், கடைகளின் கழிவுநீர் கலப்பதாக மக்கள் கூறினர். மொத்தத்தில், புனித நீராட தகுதியான, தூய்மையான இடமாக இல்லை; கால்களைக்கூட நனைக்க முடியாது. இடையூறாக தெருநாய்கள், மாடுகள் திரிகின்றன. பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகம். கழிவுகளை சுத்திகரித்து, கடலில் விடுவதாக ராமேஸ்வரம் நகராட்சி கமிஷனர் தெரிவித்தார். அப்பணி பெயரளவில் நடக்கிறது. சுத்திகரிக்கப்படும் கழிவுநீரை, தொலைதூர பகுதிக்கு கடத்தி, கடலில் விடலாம். கோயிலுக்குள் தீர்த்தமாடும் பகுதியிலும் தண்ணீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது, என குறிப்பிட்டிருந்தனர். விசாரணையை ஜன.,3 க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.