பதிவு செய்த நாள்
23
டிச
2013
12:12
சபரிமலை: கேரள போலீசார் சார்பில், சபரிமலை சன்னிதானத்தில், "கற்பூரஆழி பூஜை நேற்று நடந்தது. மண்டலபூஜைக்கு முன், சபரிமலையில் நடக்கும் முக்கிய நிகழ்வு கற்பூரஆழி பூஜை. "உருளி என்ற வட்ட வடிவ பாத்திரத்தில் கற்பூரங்களை இட்டு தீபம் ஏற்றி, இரண்டு பேர் அதை சுழற்றியபடி கோயிலை வலம் வருவர்; அப்போது, கற்பூர தீபம் மேல்நோக்கி எழும்பும். நேற்று மாலை, தீபாராதனை முடிந்து, கொடிமரத்தின் அருகில் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு, மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி ஆகியோர் கற்பூரத்தில் தீபம் ஏற்றினர். தொடர்ந்து, "கற்பூர ஆழி புறப்பட்டது. சிங்காரிமேளம், மயூர நடனம், காவடியாட்டம், அர்த்தநாரீஸ்வர நடனம், செண்டைமேளம் இடம் பெற்றன. நாரதர், கணபதி, பிரம்மா, பரமசிவன், பந்தளம் மன்னர், வாவர் வேடம் தரித்து, பக்தர்களும் பங்கேற்றனர். கோயிலை வலம் வந்து, மாளிகைப்புறம் கோயிலில் தரிசனம் முடித்து, 18ம் படி அருகே நிறைவு பெற்றது; இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.