காரைக்கால்: திருநள்ளார் சனி பகவான் கோவில் ப்ரக்குருதி யானை நேற்று இரண்டாம் முறையாக மேட்டுபாளையம் தேக்கம்பட்டியில் நடக்கும் புத்துணர்ச்சி முகாமிற்காக புறப்பட்டது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு ஆசி வழங்கவும், விழாக்காலங்களில் சாமி புறப்பாடு சமயத்தில் உடன் செல்லவும் கோவில் நிர்வாகம் மேற்கு தொடர்ச்சி மலை சிமோகாவில் உள்ள சக்ரபால் யானைகள் முகாமில் இருந்து ப்ரக்குருதி என்ற 6 வயது குட்டி பெண் யானை கடந்த 2011ம் ஆண்டு வாங்கப்பட்டது. தற்போது 9 வயதாகிறது. தமிழக கோவில்களில் உள்ள யானைகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை புத்துணர்வு முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்த முகாமில் திருநள்ளார் சனிபகவான் கோவில் ப்ரக்குருதி யானையும் பங்கு பெற புதுச்சேரி அரசு சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. இதற்கு தமிழக அரசு சம்மதம் தெரிவித்தது. இதையெடுத்து திருநள்ளார் ப்ரக்குருதி யானை கோயம்பத்தூர் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நடக்கும் முகாமிற்கு நேற்று புறப்பட்டது. யானையுடன் 2 பாகன்களும் சென்றனர். முகாமிற்கு யானையை வழியனுப்பும் நிகழ்ச்சி கோவிலில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,சிவா,முன்னால் எம்.எல்.ஏ.,கணபதி,கோவில்கள் நிர்வாக அதிகாரி ராஜராஜவீராசாமி ஆகியோர் முன்னிலையில் சிவாச்சார்யர் யானைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி தீபாரதனை காண்பித்தார். பின் யானைக்கு பிரசாதம், பழங்கள் வழங்கப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டு முகாமிற்கு புறப்பட்டது.