பதிவு செய்த நாள்
24
டிச
2013
11:12
திருச்சி: வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு துப்புரவு பணிகளில், 200 தற்காலிக பணியாளர்களை ஈடுபடுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வரும், 31ம் தேதி துவங்கி ஜனவரி, 21ம் தேதி வரை 22 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு வெளியூர்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்வார்கள். இதற்காக ஸ்ரீரங்கம் பகுதி முழுவதிலும் சுகாதார பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி சிறப்பு திட்டத்தை வகுத்துள்ளது. தற்காலிக துப்புரவு பணியாளர்கள், 200 பேரை நியமனம் செய்து, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக கூடுதல் மின் விளக்கு, சிறுநீர் கழிப்பிடம், மருத்துவ கொட்டகை, குடிநீர் வசதி ஆகியவையும் ஏற்படுத்தப்படவுள்ளது. சுகாதார பணிக்கு கூடுதலாக பிளீச்சிங் பவுடர், நீர்த்த சுண்ணாம்பு, நூவான் ஈக்கொல்லி மருந்து, ஆயிரம் லிட்டர் பினாயில் ஆகிவற்றை வாங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தற்காலிக பணியாளர் சம்பளம் உள்ளிட்ட இதர பொருட்களில் செலவுக்காக, 23.86 லட்சம் ரூபாய் செலவிடப்படவுள்ளது.இந்த தொகையில், 50 சதவீத கட்டணத்தை ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்திடம் வசூலிக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.