சபரிமலை: தனியார் பங்களிப்புடன் பம்பை - சன்னிதானம் இடையே ரோப்வே அமைக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோவிந்தன்நாயர் கூறினார். சபரிமலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலையில் நடப்பு சீசனில் பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டது. இரண்டரை கோடி ரூபாய் செலவில் 20 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் தேக்க தொட்டிக்கட்டப்பட்டு வருகிறது. ஒன்றரை கோடி ரூபாய் செலவில் பக்தர்கள் தங்கும் மூன்று கட்டிடங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. மாளிகைப்புறத்தம்மன் கோயிலிலிருந்து பிரசாத மண்டபம் மற்றும் அன்னதான மண்டபத்துக்கு செல்ல 45 லட்சம் ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. மரக்கூட்டத்தில் பக்தர்களிடையே ஏற்படும் நெரிசலை தவிர்க்க ஒன்றரை கோடி ரூபாய் செலவில் சுரங்கப்பாதை அமைக்கப் பட்டுள்ளது. ஆறு கோடி ரூபாய் செலவில் தலா 25 ஆயிரம் சதுர அடியில் இரண்டு அன்னதான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. சுவாமி ஐயப்பன் ரோடு இரண்டு லட்சம் ரூபாய் செலவில் கான்கிரீட் செய்யப்பட்டுள்ளது. பம்பை நிலக்கல்லில் 80 லடசம் ரூபாய் செலவில் குடிநீர் டேங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பணிகள்: அடுத்த சீசனுக்கு முன்னர் குன்னாறு அணையின் நீர்மட்டம் இரண்டு கோடி ரூபாய் செலவில் அதிகரிக்கப்படும். சன்னிதானத்தின் கீழ் திருமுற்றம் ஒரு கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்படும். சன்னிதானம் பெரிய நடைப்பந்தல் 35 கோடி ரூபாய் செலவில் இரண்டடுக்கு கட்டிடமாக மாற்றப்படும். பாண்டித்தாவளம் அருகே 22 கோடி ரூபாய் செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். சீசனில் பக்தர்களுக்கிடையே டிராக்டர் ஓடுவதை தவிர்க்க இரண்டு கோடி ரூபாய் செலவில் புதிய பாதை அமைக்கப்படும். ஒரு கோடி ரூபாயில் சன்னிதான கழிவறைகள் நவீனப்படுத்தப்படும்.
சரங்குத்தி முதல் மரக்கூட்டம் வரை கியூ காம்ப்ளக்ஸ் 30 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். பாண்டித்தாவளத்தில் புதிதாக ஒரு சுடுநீர் உற்பத்தி மையம் உருவாக்கப்பட்டு அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படும். இதற்காக ஒரு கோடி ரூபாய் செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மாளிகைப்புறம் கோயில் ஆறு கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும். 15 கோடி ரூபாய் செலவதில் புதிய அப்பம் அரவணை பிளானட் அமைக்கப்படும். தனியார் ஒத்துழைப்புடன் பம்பை- சன்னிதானம் இடையே ரோப்வே அமைக்கப்படும். இதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது. நிலக்கல் மகாதேவர் கோயில் மற்றும் வள்ளியறைக்காவு கோயில்கள் இரண்டு கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும், பம்பையில் இரண்டு கோடி ரூபாய் செலவில் புதிய விருந்தினர் மாளிகை கட்டிடம் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.