பதிவு செய்த நாள்
26
டிச
2013
11:12
ராமேஸ்வரம்: இந்து அறநிலைத்துறை தடை மீறி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரத்தில், பிரமாண்ட பந்தலில் தனியார் பஜனை கூட்டம் நடத்தினர். தமிழக முக்கிய கோயில்களில், தனியார் மற்றும் இந்து அமைப்புகள் குத்து விளக்கு பூஜை, பஜனை, ஆன்மீக நிகழ்ச்சி நடத்த கூடாது என, ஆறு மாதத்திற்கு முன்பு, இந்து அறநிலைத்துறை தடை விதித்து, அனைத்து கோயில் நிர்வாகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால் தடை மீறி, நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரத்தில், டில்லி, ம.பி, உ.பி., மாநிலத்தை சேர்ந்த 500 பக்தர்கள், ஆன்மீக சொற்பொழிவு, பஜனை நடத்த, பிரகாரத்தில் உள்ள ராமலிங்க பிரதிஷ்டை கண்காட்சியகத்தை மறைத்து, பிரமாண்ட பந்தல், மைக் செட் அமைத்து, பக்தர்கள் நடந்து முடியாத அளவிற்கு தடையை ஏற்படுத்தி, நிகழ்ச்சி நடத்தினர். இந்து அறநிலைதுறை உத்தரவை காற்றில் பறக்க விட்டு, தனியார் நடத்திய பஜனைக்கு மின்சார சப்ளை கொடுத்து, அனுமதி கொடுத்தது யார் என, பக்தர்கள் கேள்வி எழுப்பினர். அமைச்சர் கண்டிப்பு: நேற்று மூன்றாம் பிரகாரத்தை ஆய்வு செய்த அமைச்சர் சுந்தர்ராஜன், அனுமதியின்றி நடந்த பஜனையை கண்டு, அதிகாரிகளை கண்டித்துள்ளார். இதனையடுத்து, கோயில் ஊழியர்கள் பஜனை நிகழ்ச்சியை ரத்து செய்ய, வட இந்திய பக்தரிடம் வலியுறுத்தினர். இதுகுறித்து இந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கூறியதாவது: கோயிலில், இந்து அமைப்புகள், பக்தர்கள் ஆன்மீக நிகழ்ச்சி நடத்த, தடை விதித்து இருந்தும், ராமேஸ்வரம் கோயிலில் மூன்றாம் பிரகாரத்தை, தனியாருக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இதுபோன்ற நிகழ்ச்சி வெளியில் நடத்தினால், வட இந்திய பக்தருக்கு 3 முதல் 4 லட்சம் வரை பந்தல் செலவு ஏற்படும். தற்போது நடந்த நிகழ்ச்சிக்கு, கோயில் அதிகாரிக்கு எவ்வளவு ஆதாயம் கிடைத்தது. கோயிலை வணிக கட்டடமாக மாற்றிய, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்தார். இதுகுறித்து கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது: பக்தர்கள் உற்சாகத்தில் நிகழ்ச்சி நடத்த முயன்றுள்ளனர். தகவல் கிடைத்தவுடன் உடனே நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதற்கு அனுமதி கொடுத்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் இதுபோன்ற நிகழ்ச்சி நடக்காது என, தெரிவித்தார்.