பதிவு செய்த நாள்
30
டிச
2013
11:12
காஞ்சிபுரம்: அறநிலைய துறையின் அனுமதி இல்லாமல், கோவிலில் திருப்பணி செய்ய பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், திருப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பக்தர்கள் புகார்: பெரிய காஞ்சிபுரம் வெள்ளக்குளம் பகுதி யில் உள்ளது, சந்தவெளியம்மன் கோவில். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. இக்கோவிலில் மொத்தம், 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திருப்பணிகள் கடந்த அக்டோபர் மாதம் துவங்கியது. பக்தர்களிடம் வசூல் செய்து, அறநிலையத் துறையின் அனுமதியின்றி யும், ஆகம விதிமுறைகளை மீறியும் திருப்பணி நடப்பதாக, பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, அறநிலையத் துறை உதவி ஆணையர், இணை ஆணையர் ஆகியோருக்கு, புகார் மனு சென்றது. இதனால் திருப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து, சந்தவெளியம்மன் கோவில் செயல் அலுவலர் வேலரசு கூறுகையில், "சின்ன வேலை என்பதால் பங்களிப்பாளர்களே செய்கின்றனர்.
அனுமதிக்கு காத்திருப்பு: வசூல் செய்து, பணி செய்வதற்கான தகுந்த ஆதாரத்துடன் எனக்கு புகார் வரவில்லை. இனிமேல் இணை ஆணையரிடம் அனுமதி பெற, தபால் அனுப்பி உள்ளோம். அதன்பின், திருப்பணி தொடர்ந்து நடக்க ஏற்பாடு செய்யப்படும்," என்றார்.