பதிவு செய்த நாள்
02
ஜன
2014
12:01
சேலம்: ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் நெய், திருப்பதியில் லட்டு தயாரிப்புக்கு அனுப்பப்பட்டு வந்தது. பால் உற்பத்தி தடைபட்டதால், நெய் அனுப்புவது நிறுத்தப்பட்டது. மீண்டும், திருப்பதி லட்டு தயாரிப்புக்கு ஆவின் நெய் அனுப்பப்பட வேண்டும் என, பால் முகவர் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி தெரிவித்ததாவது: தமிழகத்தில், 17 ஆவின் ஒன்றியங்களில் இருந்து, நாள்தோறும், 18 லட்சம் லிட்டர் பால் சப்ளைக்கு அனுப்பப்படுகிறது. இவை தவிர, நெய், வெண்ணெய், பால்பவுடர் உள்ளிட்டவையும் தயாரிக்கப்படுகிறது. பால் சப்ளை செய்ய, ஒவ்வொரு மாவட்டத்திலும், குறைந்தபட்சம், 5,000 முகவர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும், இரண்டு லட்சம் பேர் இப்பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் தவிர, ஆவின் பூத்துகள் மூலமும் பால் வினியோகம் நடந்து வருகிறது. கடந்த, 2001 - 06 ஆட்சிக்காலத்தின்போது, அப்போதும் முதல்வராக இருந்த ஜெயலலிதா, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, லட்டு தயாரிப்பதற்கு ஆவின் நிறுவனத்தில் இருந்து நெய் வினியோகம் செய்ய உத்தரவிட்டார். பின், ஆவின் நிறுவனத்தில் ஏற்பட்ட பால் தட்டுப்பாடு காரணமாக, நெய் வினியோகம் நிறுத்தப்பட்டது. தற்போது, பால் வினியோகம் அதிகரித்திருப்பதால், திருப்பதிக்கு நெய் வினியோகத்தை தொடர வேண்டும். உயிர்காக்கும் பொருளான பாலில் கலப்படம் செய்பவர்களை கண்டறிவதற்காக, தமிழக அரசு தனியாக நிபுணர் குழு ஒன்று அமைக்க வேண்டும். பால் முகவர்களை பொறுத்தமட்டில், அவர்களுக்கு, அதிகாலை, 2 மணி முதல், 7 மணி வரை, தான் வேலையே உள்ளது. பெரும்பாலான முகவர்கள் சரியான உறக்கமின்மையால் மனஉளைச்சல் மற்றும் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. பால் முகவர்களை, போலீஸார் மடக்கிப் பிடித்து தொடர் விசாரணை நடத்துவதால், குறிப்பிட்ட நேரத்தில் அவர்களால் பால் வினியோகிக்க முடியவில்லை. இதை கருத்தில் கொண்டு, பால்வளத்துறை மூலம், முகவர்களுக்கு அடையாள அட்டையும், விபத்து காப்பீடும் ஏற்படுத்தி கொடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.