பதிவு செய்த நாள்
02
ஜன
2014
12:01
சத்தியமங்கலம்: தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் ஸ்தலங்களில் ஒன்றான, சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில், நேற்று புத்தாண்டு மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். காலை, 5 மணிக்கு சிறப்பு பூஜையும், மதியம் உச்சிகால பூஜையும் நடந்தது. வெகுதூரம் நின்று, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு முதல், ஈரோடு, கோபி, திருப்பூர், சத்தி பகுதிகளில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டனர். ஏராளமானவர்கள் பாதயாத்திரையாக வந்து சென்றனர். நேற்று பண்ணாரி மாரியம்மன், தங்க கவசத்தில் அருள்பாலித்தார். அம்மனுக்கு பணத்தால் கட்டி மாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவிலுக்கு முன் உள்ள குண்டத்தில், பக்தர்கள் உப்பு கொட்டி வணங்கினர். கோவில் வளாகத்தில், பல்வேறு பகுதிகளில், அன்னதானம் வழங்கப்பட்டது.சத்தியில் இருந்து, பவானீஸ்வரர் கோவில், வேணுகோபால்சுவாமி கோவில், சிவியார்பாளையம் மலைக்கோவில் என்று அழைக்கப்படும் தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கும் பக்தர்கள் சென்றனர்.தவிர, பவானிசாகர் அணையில் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.