சீதக்களப செந்தாமரைப் பூம் என்று துவங்குகிறது அவ்வையார் அருளிய விநாயகர் அகவல். இதைப் படித்தால் புரியவில்லையே என பலர் ஏங்குவதுண்டு. யோக சாஸ்திரத்தின் ஒரு பகுதி இந்த அகவலில் இருப்பதால், எதற்கு வம்பென விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் போன்ற எளிமையான பாடல்களையே விநாயகரை வணங்கும் அன்பர்கள் பாடுகிறார்கள். நிஜத்தில் விநாயகர் அகவல் பல நன்மைகளைத் தரக்கூடியது. இதைப் புரிந்து படித்தால் தான் என்பதில்லை! புரியாமல் படித்தாலும் நன்மை தரும். ஏனெனில், அத்தகைய மகத்துவம் அவ்வையாரின் பாடல்களுக்கு உண்டு. குறிப்பாக, பெண்களும், குழந்தைகளும் இந்த அகவலைத் தவறாமல் படிக்க வேண்டும். அவ்வையார் பெண் என்பதால், அவர்களுக்கே இதில் உரிமை அதிகம். இந்த அகவலைச் சொல்வதால் வீட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே நன்மை என்பதை உணருங்கள். நாட்டில், இன்றைய பாதுகாப்பற்ற நிலையில் விநாயகர் அகவல் ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.