பதிவு செய்த நாள்
04
ஜன
2014
10:01
சபரிமலை: சபரிமலையில், மகரவிளக்கு தரிசனம் சுமூகமாக நடைபெறும் வகையில், பக்தர்களுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்து, பத்தனம் திட்டா கலெக்டர் தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பத்தனம் திட்டா கலெக்டர் பிரணப் ஜோதிநாத் தலைமையில், நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: சபரிமலை பாதையில், போக்குவரத்து நெரிச்சலை தவிர்க்க, பக்தர்களின் வாகனங்கள் முறைப்படுத்தப்படும். போலீசின் தகவல் பரிமாற்ற அமைப்பு வனப்பாதைகளிலும் விரிப்படுத்தப்படும். பக்தர்களின் வாகனங்களை நிறுத்த, செங்கன்னூர், புனலூர், அடூர், திருவல்ல, எருமேலி, இலவுங்கல் ஆகிய இடங்களில் வசதி ஏற்படுத்தப்படும். இந்த பகுதிகளில், பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவ உதவி, செய்து தரப்படும். போக்குவரத்து தடைபடும் இடங்களில், பக்தர்களுக்கு பிஸ்கட், குடிநீர் ஆகியவை வழங்கப்படும். அரசு பஸ், குடிநீர், ஆம்புலன்ஸ் ஆகிய அடிப்படை சர்வீஸ்கள், தடைபடாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போக்குவரத்து போலீசாரின் பைக் ரோந்து தீவிரபடுத்தப்படும். பம்பை-சன்னிதானம் பாதையில் 14 இடங்களில் ஆக்சிஜன் பார்லர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில், இதய நோயாளிகளுக்கும், சிறப்பு மருத்துவ சேவை கிடைக்கும். கரிமலையில் "டிஸ்பென்சரி செயல்பட துவங்கி உள்ளன. கூட்டத்தில், மாவட்ட எஸ்.பி., ராகுல் நாயர், துணை கலெக்டர் நூஹ், விபத்து நிவாரண துணை கலெக்டர் சாவித்திரி, ஆர்.டி.ஓ., க்கள் கோபகுமார், ஹரி நாயர் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.