பதிவு செய்த நாள்
04
ஜன
2014
10:01
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை, ஆந்திர கவர்னர், நரசிம்மன், கேள்விகள் பல கேட்டு திணறடித்தார். திருமலை ஏழுமலையானை தரிசிக்க, நேற்று முன்தினம் நள்ளிரவு, ஆந்திர கவர்னர் நரசிம்மன், தன் மனைவி, விமலாவுடன், திருமலைக்கு வந்தார். அவரை, தேவஸ்தான அதிகாரிகளும், மாவட்ட கலெக்டரும் வரவேற்றனர். பின், திருமலையில் உள்ள, பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், நேற்று அதிகாலை நடைபெற்ற, ஏழுமலையானின் அபிஷேக சேவையில் சுவாமி தரிசனம் செய்தார். பின், ரங்கநாயகர் மண்டபத்தில், சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர், பாபி ராஜு மற்றும் செயல் இணை அதிகாரி, சீனிவாச ராஜுவிடம், கவர்னர் கேட்டதாவது: திருமலை ஏழுமலையானின், நித்திய சேவைகளை, பக்தர்கள் கண்டுகளிக்க, ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சானல் உள்ளது. அதில், திருப்பதி, அலிபிரிக்கு அருகில், ஏழுமலையான் மாதிரி, கோவிலில் நடைபெறும், ஆர்ஜித சேவைகளை, ஒளிபரப்பி வருகின்றனர். ஆனால், புத்தாண்டன்று அதிகாலை, ஏழுமலையானின் ஆர்ஜித சேவைகளை ஒளிபரப்பாமல், வேறு பஜனை நிகழ்ச்சிகளை, ஒளிபரப்பியது ஏன்? இவ்வாறு அவர் கேட்டார். அவர், கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், அதிகாரிகள் திணறினர். இது போன்ற தவறுகள், இனி நடைபெறாமல், திருத்திக் கொள்ள வேண்டும், என, அவர்களை, கவர்னர் கண்டித்து, கிளம்பினார்.