பதிவு செய்த நாள்
09
ஜன
2014
10:01
பழம்பெருமை வாய்ந்த கைலாசநாதர் கோவில், பராமரிப்பு இன்றி சீரழிந்து வருகிறது. ஒரு கால பூஜையும் நடக்காததால், பக்தர்கள் வேதனை அடைந்து உள்ளனர். பள்ளிப்பட்டு அடுத்த, ஈச்சம்பாடி கிராமத்தில், கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இது, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தலமாகும். கோவில் மதில்சுவர் முற்றிலும் சீரழிந்த நிலையில், பிரதான வாசலும், இடிந்துவிழும் நிலையில் பரிதாபமாக காட்சி யளிக்கிறது. இந்து சமய அறநிலையத் துறையால் கையகப்படுத்தப்பட்டு, தினசரி ஒரு கால பூஜை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், சில ஆண்டுகளாக, பூஜை நடப்பதில்லை. விழா காலத்தில் மட்டும், கிராம மக்களே பூஜை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவிலின் மேல்தளம் முழுவதும் மரம், செடிகள் ஏராளமாக முளைத்துள்ளன. இதனால், பாரம்பரியமான கோவில் உறுதியை இழந்து வருகிறது. கோவிலை பராமரிக்கவும், பூஜை நடத்தவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஈச்சம்பாடி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கூறுகையில், இப்பகுதி, மன்னர்கள் ஆதிக்கத்தில் இருந்தபோது, இந்த கோவிலின் நடை அடைக்கப்படும் ஒலி, 10 கி.மீ., துாரத்தில் உள்ள கார்வேட் நகர அரண்மனையில் கேட்கும். அந்த சத்தம் கேட்ட பிறகே, மன்னர் உறங்கச் செல்வார் என்றார்.