பதிவு செய்த நாள்
10
ஜன
2014
11:01
உடுமலை: உடுமலை அருகே, கால்நடைகளுக்காக, கொண்டாடப்படும் திருவிழாவிற்காக, உருவார பொம்மை தயாரிக்கும் பணிகள் கிராமத்தில், தீவிரமடைந்துள்ளன. உடுமலை அருகேயுள்ள, சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவிலில் பொங்கலையொட்டி மூன்று நாட்கள் திருவிழா நடக்கிறது. கால்நடைகளை காக்கும் தெய்வமான ஆல்கொண்டமாலனுக்கு, பல்வேறு உருவாரங்களை (மண் பொம்மைகள்) வைத்து வழிபடுவது பக்தர்களின் வழக்கமாகும். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், தங்கள் பண்ணைகளில் பால் வளம் பெருகவும், வீட்டு விலங்குகள் பாதிப்பிலிருந்து மீளவும் இந்த வழிபாட்டை மேற்கொள்கின்றனர். இத்திருவிழாவிற்காக, பிரத்யேகமாக, உடுமலை அருகிலுள்ள புக்குளம் கிராமத்திலுள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் உருவாரங்களை தயாரிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை, பொட்டிநாயக்கனூர், முருங்கப்பட்டி, கோட்டமங்கலம், ஏரிப்பாளையம், கள்ளிபாளையம், பொட்டையம்பாளையம், சோமவாரப்பட்டி, பெதப்பம்பட்டி, தும்பலப்பட்டி, மடத்தூர், பெரும்பள்ளம், சாயப்பட்டறை, கோழிக்குட்டை, அம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில், உருவார பொம்மை தயாரிக்கும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டு வந்தனர். சமீபகாலமாக இத்தொழிலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை குறைந்து, ஒருசிலர் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, குடிமங்கலம் ஒன்றியத்துக் குட்பட்ட புக்குளம், தலகொண்டம்மன் கோவில் வீதியில் வசிக்கும் மலையாண்டி, 73 என்பவர் தனது சகோதரர் மகன் கருப்புசாமியுடன் இணைந்து, இத்தொழிலை பாரம்பரியமாக செய்து வருகிறார். மலையாண்டி கூறிய தாவது: கோவில் விஷேசங்களுக்கு மண் சிலைகள், உருவார பொம்மைகளை செய்து கொடுக்கிறோம். கருப்பராயன், கன்னிமார், பட்டாலம்மன் உள்ளிட்ட அனைத்து கடவுள்களின் உருவங்கள், கால்நடைகளான பசு, காளை, பூனை, நாய், கோழி, சேவல், குதிரைகள் என, உருவார பொம்மைகளும் செய்து வருகிறோம். இதற்கு தேவையான களிமண் ஆத்தூர், கோதவாடி மற்றும் கொழுமம் மயிலாபுரம் கோதையம்மன் குளத்திலிருந்து எடுத்து வருகிறோம். தற்போது மண் எடுப்பதில் சிரமம் இருப்பதால், வெளியில் இருந்து அதிக விலைக்கு மண் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வருமானம் போதாது என்றாலும், குலத்தொழிலை கைவிட விருப்பமில்லாததால், தொடர்ந்து செய்து வருகிறோம். இத்தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களில் பலர் வேறு தொழிலுக்கு சென்று விட்டதால், இத்தொழில் அழிந்து விடும் நிலை ஏற்பட்டிருந்தாலும், என்னால் முடிந்த வரை தொடர்ந்து, இத்தொழிலை மேற்கொள்வேன். இவ்வாறு, மலையாண்டி கூறினார்.