பதிவு செய்த நாள்
11
ஜன
2014
05:01
ஸ்ரீரங்கம் : வைணவத் திருத்தலங்களில் பெரிய கோயில் எனப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் ஆண்டு முழுவதும் நடக்கும் அனைத்து உற்சவங்களுமே சிறப்பு வாய்ந்தவை. குறிப்பாக வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் புகழ் பெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்.
நேற்று 10ம் தேதி சுவாமி நம் பெருமாளுக்கு புகழ்பெற்ற மோகினி அலங்காரம் செய்யப்பட்டது. அதாவது நாச்சியார் திருக்கோத்தில் எருந்தருளினார். தலையில் ஆண்டாள் கொண்டை, கையில் கிளி, கன்னத்தில் திருஷ்டி பொட்டுடன், கால்களை பெண்ணைப் போலவே மடித்து அமர்ந்து, விதவிதமான நகைகளுடன் காட்சி தருவார். இன்று 11ம் தேதி அதிகாலை 1 மணிக்கே கோயில் திறக்கப்பட்டு, அதிகாலை 3 மணிக்கு உடம்பெல்லாம் மாதுளை முத்துக்களைப் போல் ரத்தினங்கள் பளபளக்க, ரத்ன அங்கி உடுத்தி, மூலஸ்தானத்தில் இருந்து சுவாமி நம்பெருமாள் தரிசனம் தந்தார். பெருமாள் கொடிமரம் கடந்து, பரமபத வாசலுக்கு உட்புறம் வந்து நின்றவுடன், தொடர்ந்து பரமபத வாசற்கதவுகள் திறக்கப்பட்டு, பெருமாள் பரமபத வாசல் கடந்தார். அவருடன் லட்சக்கணக்கான பக்தர்களும் சென்றார்கள். இரவு வரை ஆயிரங்கால் மண்டபத்தில் ரத்ன அங்கியுடனேயே பெருமாள் காட்சி தருவார்.
மூலவர் ரெங்கநாதருக்கு முத்துக்களால் ஆன பிரமாண்ட அங்கி சார்த்தப்பட்டு இருக்கும். தலையில் அழகாய் முத்துக்களால் ஆன தலைப்பாகை அணிந்திருப்பார். மூலஸ்தான தீப ஒளியில் மின்னும் முத்தங்கியை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஏகாதசியில் இருந்து தொடர்ந்து வரும் 10 நாட்கள் இராப்பத்து திருநாள் எனப்படுகிறது. இராப்பத்து திருநாட்களிலும் தினமும் மதியம் 12 மணியளவில் சுவாமி நம்பெருமாள், சொர்க்கவாசலை கடப்பார். தினமும் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கும்.
வேடுபறி உற்சவம் : சோழ நாட்டின் மிகப்பெரிய மன்னர்களுள் ஒருவர் திருமங்கை மன்னன். தன் நாட்டையும், சொத்துக்களையும் பெருமாள் திருப்பணிக்கே செலவிட்டவர். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மதில் எழுப்பி வந்த நிலையில், செல்வமெல்லாம் கரைந்து போனது. இதனால் செல்வந்தர்களிடம் கொள்ளையடித்து, அந்தப் பணத்தில் திருப்பணி செய்துவந்தார். அவரை நல்வழிப்படுத்த எண்ணிய பெருமாளும், தாயாரும் புதுமணத் தம்பதிகளாக ஒரு மாட்டுவண்டியில் சென்றனர். வண்டியை வழிமறித்த திருமங்கை மன்னன், தம்பதிகளிடம் இருந்த நகைகளையெல்லாம் எடுத்துக் கொண்டார். மணமகனின் கால் விரலில் கிடந்த மோதிரத்தை மட்டும் அவரால் கழட்ட முடியவில்லை. பல்லால் கடித்து இழுத்தார் திருமங்கை மன்னன். உடன் அவருக்கு புத்துயிர் கிடைத்தது. அப்போதே வானேன் வாடி... என்ற பாசுரம் உதித்தது. திருமங்கையாழ்வார் பாடியவையே திருமொழி எனப்படுகிறது. திருமங்கை மன்னனை ஆழ்வாராக ஏற்றுக் கொண்ட திருநாளே வேடுபறி உற்சவமாக நடக்கிறது.
அடியாரை ஏற்றுக் கொண்ட மகிழ்ச்சியில், குதிரை வாகனத்தில் பெருமாள் அங்குமிங்கும் துள்ளி விளையாடுவதை காண லட்சக்கணக்கானவர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிவார்கள்.
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி முக்கிய நிகழ்வுகள்
10.1.14 : மோகினி அலங்காரம்
11.1.14 : வைகுண்ட ஏகாதசி
17.1.14 : திருக்கைத்தல சேவை
18.1.14 : முத்தங்கி சேவை (தினமும்)
18.1.14 : வேடுபறி உற்சவம்
20.1.14 : தீர்த்தவாரி
21.1.14 : நம்மாழ்வார் மோட்சம்