பதிவு செய்த நாள்
22
ஜன
2014
11:01
காஞ்சிபுரம்: வரதராஜபெருமாள் கோவில் தெற்கு மாட வீதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் நகரின் பிரதான பகுதியில், பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில், அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், உள்ள இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராள மான பக்தர்கள் தினந்தோறும் வருகின்றனர். இந்நிலையில், கோவில் தெற்கு மாட வீதியில், கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல், கோவில் மதில் சுவரை ஒட்டி 50க்கும் மேற்பட்ட கடைகள் நீண்ட காலமாக இருக்கின்றன. வியாபார போட்டி காரணமாக, சாலையை ஆக்கிரமித்து, வியாபாரிகள் தங்கள் கடைகளை விரிவுபடுத்துகின்றனர். இதனால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தெற்கு மாட வீதியில் கடைகள் அமைத்துள்ள வியாபாரிகள் கூறுகையில் வியாபாரிகளிடம், வாரம் ஒரு முறை ஒவ்வொரு கடைக்கும் 100 ரூபாய் வீதம் போலீசார் வசூலிக்கின்றனர். பிறகு நாங்கள் ஏன் கடைகளை அகற்ற வேண்டும்? என்றனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் கூறுகையில், வியாபாரிகளிடம் போலீசார் பணம் வாங்குவதாகக் கூறுவதை ஏற்க முடியாது. நகராட்சி நிர்வாகம் முறையாக மனு அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். வரதராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலர் கூறுகையில், கோவில் மதில் சுவரை ஒட்டி அமைக்கப்பட்டு உள்ள கடைகளை அகற்றுமாறு, நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு அளிக்கப்பட்டு உள்ளது. அவர்கள்தான் அகற்ற வேண்டும், என்றார். இதுகுறித்து, அப்பகுதி குடியிருப்புவாசிகள் கூறுகையில், சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளில் இருந்து, வெளியேற்றப்படும் கழிவுகள் சாலையில்தான் கொட்டப்படுகின்றன. சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது என்றனர்.