பதிவு செய்த நாள்
23
ஜன
2014
11:01
முசிறி: முசிறியில் மிகவும் பழைமை வாய்ந்த கள்ளர் தெரு மாரியம்மன் கோவிலில் உலக மக்கள் அமைதியான முறையில் வாழவும், மழை வேண்டியும் சொக்கநாதர் மீனாட்சி திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு நடந்தது. இதையொட்டி பக்தர்கள் சார்பில் திருமண பத்திரிக்கை அச்சிட்டு விநியோகிக்கப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் ஸ்வாமி சிவபெருமான், அம்பிகை மீனாட்சி பிராட்டியார் திருமணக்கோலத்தில் எழுந்தருளினார். பின்னர், திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் கள்ளழகர் தலைமையில் மீனாட்சி அம்மனுடன் மாப்பிள்ளை அழைப்புடன், சீர் வரிசை தட்டுகளுடன் தெரு வீதிஉலா வந்தார். ஸ்வாமியின் வீதி உலாவின் பின்னால் பக்தர்கள் தங்களது வீட்டின் திருமணத்தை எடுத்துச் செல்லும் சீர்வரிசைகள் போல் பழ வகைகள், மஞ்சள், தாலி கயிறு, வளையல்கள், இனிப்பு பதார்த்தங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை ஏந்தி வந்தனர். தொடர்ந்து மீனாட்சிக்கு தங்கத்தாலி ஏந்தி சொக்கநாதர் திருக்கல்யாண உற்சவம் வாணவேடிக்கைகள் முழங்க விமர்சையாக நடந்தேறியது. பின்னர் பக்தர்களுக்கும், மக்களுக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை இளைஞர் அணி நண்பர்கள், தென், வட, புது கள்ளர் தெருமக்கள் விழா கமிட்டியினர் செய்தனர். விழாவில், மாஜி எம்.எல்.ஏ., ஜோதிக்கண்ணன், நகர துணை செயலாளர் சிவக்குமார், முன்னாள் வார்டு கவுன்சிலர் முருகன், அ.தி.மு.க., உறுப்பினர் நந்தினி சரவணன், அப்பகுதி பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். திருக்கல்யாண உற்சவத்தை முசிறி லட்சுமி நாராயணன் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தினர்.