சிதம்பரம் நடராஜர் ராஜகோபுரத்தில் குடியரசு தின தேசியக்கொடி ஏற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2014 12:01
சிதம்பரம்: நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில் குடியரசு தின தேசியக்கொடி ஏற்றி பொது தீட்சிதர்கள் கொண்டாடினார்கள். பிரசித்திப் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் 65வது குடியரசு தினத்தையொட்டி, கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் நேற்று காலை நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றம் மகா தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதனைதொடர்ந்து தேசியக்கொடியை நடராஜர் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் தேசியக்கொடியை வெள்ளித்தட்டில் வைத்து பொது தீட்சிதர்கள் செயலாளர் காசிராஜன் தீட்சிதர் தலைமையில் மேளதாளங்களுடன் ஊர்வலமாக கோவில் கிழக்கு கோபுரவாசலுக்கு எடுத்து சென்றனர். 104 அடி உயரம் உள்ள கிழக்கு ராஜகோபுரத்தில் ஏறி கோபுர உச்சியில் தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறப்பு தீபாராதனைகள் செய்து வணங்கினார்கள். பின்னர் அங்கு கூடியிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.