பதிவு செய்த நாள்
28
ஜன
2014
10:01
சின்னமனூர்: சின்னமனூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. சின்னமனூரில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி உடனுறை லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் தைமாத திருக்கல்யாண உற்சவ விழா மூன்று நாட்கள் நடந்தது. முதல்நாளில் சுவாமியும் அம்மனும் நகர்வலம் நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம்நாளில் சுதர்ஸன ஹோமம், சுவாமிக்கும் தேவியர்க்கும் சிறப்பு அபிஷேக நிகழ்ச்சிகள் நடந்தது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் முதலில் வரசித்தி விநாயர் கோயிலில் இருந்து திருமாங்கல்யம், சீர்வரிசையுடன் தேரோடும் வீதியில் வலம் வந்து கோயிலை சென்றடைந்தது. பின்னர் உத்தரவு வாங்குதல், மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல், ஊஞ்சலில் நலுங்கு, ஊஞ்சல் சேவை, சுவாமிக்கு விசேஷ பூஜை, திருமண ஹோமம், காப்புகட்டுதல், நிச்சயதார்த்தம், கன்னிகாதானம், மாங்கல்ய பூஜை, திருமாங்கல்ய தாரணம் நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் ஸ்ரீ மந் லட்சுமி நாராயணப் பெருமாளும், ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவியரும் திருமணக்கோலத்தில் எழுந்தருளினர். சுவாமிக்கும் தேவியர்க்கும் மங்களநாணை அணிவித்து திருக்கல்யாணம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் ஆண்டாள் வாரணம் ஆயிரம் பாசுரம் சொல்லி, சீர்பாடல், மங்கல ஆரத்தி நிகழ்ச்சிகள் நடந்தது. திருக்கல்யாணத்தை ஸ்ரீ நிவாச பட்டாச்சாரியார், கோயில் தலைமை குருக்கள் நாராயணபட்டர் தலைமையிலான குருக்கள் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் திருமணக் கோலத்தில் பெருமாளும், தேவியரும் திருவீதி உலா சென்றனர். இரவில் பள்ளியறை சேவை நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் சுரேஷ், நிர்வாக அதிகாரி ரம்யசுபாஷினி மற்றும் <உபயதாரர்கள், திருக்கல்யாண விழாக் குழுவினர், அலுவலர்கள் செய்திருந்தனர்.