பதிவு செய்த நாள்
29
ஜன
2014
11:01
ஆனைமலை: பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கொடியேற்றத்திற்காக, சர்க்கார்பதி பகுதியில் இருந்து, 84 அடி உயர கொடிமரம், வெட்டி கொண்டு வரப்பட்டது.கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கொடியேற்றத்திற்காக, சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து, மூங்கில் கொடிமரத்தை வெட்டி எடுத்து, பக்தர்கள் தோளில் சுமந்து வருவது வழக்கம்.நேற்று காலை, 8:30 மணிக்கு, மாசாணியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட பக்தர்கள், சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து, 84 அடி உயர கொடிமரம் வெட்டியெடுத்தனர். பின் அங்குள்ள மாரியம்மன் கோயிலில், விபூதி, குங்குமம், பூக்களால் அலங்கரித்து, பச்சை, மஞ்சள் புடவைகளால் மூங்கிலை சுற்றிக் கட்டி, சிறப்பு பூஜைகள் செய்தனர். மதியம், 1:30 மணிக்கு புறப்பட்ட பக்தர்கள், 17 கி.மீ., துாரம், அதை தோளில் சுமந்து, மாசாணியம்மன் கோயிலுக்கு கொண்டு வந்தனர்.ஆனைமலை உப்பாற்று தண்ணீரில் வைத்து, மூங்கிலில் உள்ள வளைவுகள் சரி செய்யப்பட்டு, நாளை காலை, 8:30 மணிக்கு மாசாணியம்மன் கோயில் ராஜகோபுரத்துக்கு முன், கொடி கட்டப்படும்.