பதிவு செய்த நாள்
30
ஜன
2014
03:01
திருப்பதி வெங்கடேசப்பெருமாளின் அடையாளத்தில் ஒன்றாக இருப்பது தோமாலா. இதற்கு தோளில் அணிவிக்கும் மாலை என்று பொருள். தினமும் காலையில், முதல்நாள் பெருமாளுக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை களைந்து, கோயிலில் இருக்கும் பூக்கிணற்றில் சேர்த்து விடுவர். இவ்வாறு பூ களைவதற்கு நிர்மால்ய சேதனம் என்று பெயர். மலர்கள் அனைத்தும் பெருமாளுக்கு மட்டுமே என்ற ஐதீகம் திருமலையில் பின்பற்றப்படுவதால், பக்தர்களுக்கு பூ வழங்குவதில்லை. பூக்கட்டும் இடத்திற்கு யமுனாத்துறை என்று பெயர். அங்கிருந்து, ஜீயங்கார் என்பவர் தலைமையில், பிரம்மச்சாரி ஒருவர் கூடையில் வைத்து மாலைகளைத் தூக்கி வருவர். இவரை ஏகாங்கி என குறிப்பிடுவர். பள்ளியெழுச்சி பாடும் இருவர், திருப்பாவை சொல்லும் இருவர், புருஷ சூக்தம் சொல்லும் இருவர், முரசு அறையும் ஒருவர் ஆகியோர் பூக்கூடை பவனியில் வருவர். முதலில், பெருமாளின் மார்பில் இருக்கும் லட்சுமி தாயாருக்கு மாலை அணிவிக்கப்படும். பின்னர், பெருமாளுக்கு கிரீடத்தை தொட்டபடி இருபுறமும் தோமாலை சாத்தப்படும். அப்போது நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரம் பாடுவர், புருஷசூக்த மந்திரங்களைச் சொல்வர்.