பதிவு செய்த நாள்
31
ஜன
2014
12:01
பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின் பகுதியில் உள்ள, கூடுதுறையில் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு, தங்கள் முன்னோர்களுக்கு, தர்ப்பணம் கொடுக்க நூற்றுக்கணக்கானவர்கள் குவிந்தனர். பவானியில், முக்கூடல் சங்கமிக்கும் புண்ணிய நதிகளான காவிரி, பவானி, அமுத நதி ஆகியவைகள் சங்கமிக்கும், புண்ணிய ஸ்தலமாக பவானி கூடுதுறை விளங்குகிறது. வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் சுவாமி சுயம்பாக தோன்றி, பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். பரிகார ஸ்தலமாக விளங்கும் இவ்விடம், ராமேஸ்வரத்துக்கு இணையானது என்றும், தென்னகத்தின் காசி என்றும் அழைப்பர். நேற்று தை மாத அமாவாசையை முன்னிட்டு, தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்பணம், எள்ளூம் தண்ணீர் விட்டு செல்ல பவானி, கூடுதுறைக்கு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் குவிந்தது. தை அமாவாசையில் இது போன்ற காரியங்கள் செய்வதால், இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை. மேட்டூர் அணையில் இருந்து, காவிரியில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால், ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. நேற்று அதிகாலையில் சற்று கூட்டம் குறைவாக இருந்தது, 7 மணிக்குப்பின், கூட்டம் அதிகமானது. குட்டை போன்ற இடத்தில் குளிக்க முடியாத அளவு ஆண், பெண்கள் காணப்பட்டனர். பின், தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பி, குளிக்க ஏற்பாடு செய்தனர். புனித நீராடியவர்கள், முன்னோர்களுக்கு தர்பணம் செய்து, சங்கமேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து சென்றனர். பவானி டி.எஸ்.பி., ஆறுமுகம் தலைமையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.