பதிவு செய்த நாள்
31
ஜன
2014
12:01
தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், ராஜகோபுரத்தில் முளைத்துள்ள அரசன் மரங்களை அகற்ற வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், தைப்பூச திருவிழாவுக்கு, தர்மபுரி, நல்லம்பள்ளி, இண்டூர், பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர். இக்கோவிலில், சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், ஆருத்ரா தரிசனம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளின் போது, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சிவசுப்பிரமணிய ஸ்வாமியை தரிசிப்பர். இக்கோவில் வளாகத்தில், கிழக்கு மற்றும் மேற்கு நுழைவு வாயில்களில், ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, இக்கோவிலில், ராஜ கோபுரம், மூலகோபுரம் சீரமைப்பு உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்துக்கு பின், அறநிலையத்துறையின் கண்காணிப்பு இல்லாததால், மேற்கு பகுதியில் உள்ள ராஜ கோபுரத்தில், அரச மரம் முளைத்துள்ளது. வேரூன்றி அரசமரம் முளைத்தால், கோவில் கோபுரத்துக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள, அரசு மரங்களை அகற்ற வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.