பதிவு செய்த நாள்
04
பிப்
2014
11:02
திருப்பூர்: கொங்கணகிரியில், 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கந்த பெருமான் கோவில் உள்ளது. கந்தனும், மகா விஷ்ணுவும் ஒரே தலத்தில் இருக்கும் சிறப்பு வாய்ந்த கோவிலாகவும், அருணகிரி நாதரால், திருப்புகழ் பாடப்பெற்றதலமாகவும் உள்ளது. திருப்பூர் அருகே, சிறு குன்றில் சுயம்புவாக, தபஸ் குமாரசாமியாக எழுந்தருளியுள்ளார். மூலிகைகள் நிறைந்த இக்குன்றில் வசித்து வந்த சித்தர்கள் மட்டும் வழிபட்டு வந்துள்ளனர். கொங்கணகிரி சித்தரால், கோவில் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாறு உள்ளது. மூலவர் முன், பால் வைத்தால் தானாக பொங்கும் அதிசயம் நிறைந்த கோவிலாக இருந்ததாகவும், அதனால், இன்றும் மலையில் பால மரம் மட்டுமே இருப்பதாக வரலாறு உள்ளது. இதை மெய்ப்பிக்கும் வகையில், கோவில் அமைந்துள்ள குன்று முழுவதும் பால மரம் மட்டுமே காணப்படுகின்றன. இதனால், பொங்கு ஸ்தலம் என்றும் குறிப்பிடுகின்றனர். பாலமரத்து குச்சியையே, நாம் இன்றும் நல்ல காரியங்கள் துவங்கும்போது பிரதானமாக பயன்படுத்துகிறோம். திருமணத்தின்போது, முகூர்த்தக்கால், வீடு, புதிய கட்டடங்கள் கட்டும்போது, பாலக்கால் போடுவதற்கு, இந்த மரக்குச்சியையே பயன்படுத்துகிறோம். இக்கோவில் அமைந்துள்ள குன்றிலிருந்து, பாலமரத்து குச்சியை எடுத்துச் சென்று, காரியங்களை துவக்கினால், தடையில்லாமல், கட்டடங்கள், முகூர்த்தங்கள் நிறைவேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.
தம்பதி சகிதமாய்...:ஆறு படை வீடுகளின் அனைத்து அம்சங்களும் நிறைந்த கோவிலாக உள்ளது. முருகன் கோவில்களில் பெரும்பாலும், மூலவராக சுப்ரமணியரும், தனி சன்னதிகளில் வள்ளி, தெய்வானை அம்மையரும் அருள்பாலித்து வருவர். இக்கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத கந்த பெருமானாகவும், திருக்கல்யாண கோலத்தில், சாந்த சொரூபியாகவும், வேண்டுவோருக்கு, வேண்டுவன அருளும் கருணா மூர்த்தியாகவும் காட்சியளித்து வருவது சிறப்பு.
மூலவர் பிரதிஷ்டையின் போது, எந்திர ஸ்தாபனம் விக்ரகங்களுக்கு கீழே பதிக்கப்படும். இக்கோவிலில், பீடத்திலேயே, எந்திரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனால், இங்குள்ள சுவாமி, எந்திர ரூபமாகவும் எழுந்தருளியுள்ளது இக்கோவிலின் சிறப்பு. எந்த தடையாக இருந்தாலும், வெற்றி கொள்ளும் சக்தியை பக்தர்களுக்கு அளிக்கும், சுவாமியாக எழுந்தருளியுள்ளார். செவ்வாய்தோஷம், புத்திர, திருமண தோஷம் உள்ளிட்ட வினை தீர்க்கும் கோவிலாகவும், செவ்வாய் பரிகார தலமாகவும் உள்ளது. இச்சா, ஞான, கிரியா சக்திகள் ஒருங்கிணைந்து சஷ்டியன்று வழிபடுவதும், செவ்வாய்தோறும், வேறெந்த கோவில்களிலும் இல்லாத சிறப்பாக 308 அர்ச்சனை செய்யப்படும், திருசதை வழிபாடும் நடந்து வருகிறது.
செல்வம் கொழிக்கும்: பெரும்பாலும் முருகன் கோவில்களில், மகா விஷ்ணு சன்னதி இருக்காது. இங்கு, கருவறையில் முருகன் திருமண கோலத்தில் எழுந்தருளியிருப்பதோடு, செல்வங்களை அள்ளித்தரும் வெங்கடேச பெருமாள், வாயு மூலையில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். ஒரே கோவிலில், முருகனையும், பெருமாளையும் வழிபடுவது சிறப்பானதாகவும், சைவ, வைணவ ஒற்றுமையை காட்டும் தலமாகவும் உள்ளது. கன்னி மூலையில், எழுந்தருளியுள்ள கணபதி, செல்வ கணபதியாக குறிப்பிடப்படுகிறார்.ஈசான மூலையில், நவக்கிரக சன்னதி உள்ளது. மற்ற கோவில்களில் நவக்கிரகங்கள் மட்டும் இருக்கும். இக்கோவிலில், தமது மனைவியர், வாகனங்கள், ஆயுதங்களுடன் நவக்கிரகங்கள் எழுந்தருளியுள்ளது சிறப்பு. சூரியன், குதிரைகள் பூட்டிய வாகனத்தில் உஷா தேவியருடனும், சந்திரன்-ரோகிணி, செவ்வாய்-சக்திதேவி, புதன்-ஞானதேவி, குரு-பாராதேவி, சுக்ரன்-சுகீர்த்தி, சனி-நீலாதேவி, ராகு-சித்தி, கேது-சித்ர லேகா ஆகியோருடன், பரிபூரண கோலத்தில் எழுந்தருளியுள்ளனர். இதனால், நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.
தல விருட்சம்: தல விருட்சமாக வக்கனை மரம் உள்ளது. இது, பெண் மரம். சுயம்புவாக எழுந்தருளியுள்ள கந்த பெருமான் மரத்திற்கு கீழ் உள்ளதாகவும், இதையே சித்தர்கள் வழிபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆண் மரமாக, கோவில் வெளிபிரகாரத்தில் அரச மரம் உள்ளது. ஆண் மற்றும் பெண் மரங்கள் ஒருங்கே அமைந்துள்ள தலமாகவும் உள்ளது. திருமண தடை உள்ளவர்கள், இம்மரத்தில் தாலியை கட்டி வணங்கினால் விரைவில் திருமணம் நடக்கும், இக்கோவிலில் திருமணம் நடந்தால், முதல் குழந்தை ஆணாக பிறக்கும் என்ற நம்பிக்கையும், குழந்தை பாக்கியம் வேண்டி, தொட்டில் கட்டியும் பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.