பதிவு செய்த நாள்
10
பிப்
2014
10:02
திருப்பூர் : பல்லடம், வெங்கிட்டாபுரத்தில், ஸ்ரீஅதர்வன பத்ரகாளி பிரத்யங்கிரா தேவி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. "ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன், பக்தர்கள் தேவியை வழிபட்டனர். சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்து, ஆதிபராசக்தியாக உலகை காத்தருளும் அன்னை பிரத்யங்கிரா தேவிக்கு, பல்லடம் வெங்கிட்டாபுரம் வி.ஐ.பி., நகரில் கோவில் அமைத்து, வழிபாடு நடந்து வருகிறது. அதர்வனபத்ரகாளிக்கு, தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில், 16 அடி உயரத்தில், ஒரே கல்லில் விக்ரஹம் வடிவமைக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீதத்தகிரி சுவாமிகள் சாம்பசிவ ரிஷீஸ்வரர் முயற்சியால் அமைக்கப்பட்ட அதர்வன பத்ரகாளி பிரத்யங்கிரா தேவி கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 6ம் தேதி காலை மங்கள இசையுடன் துவங்கியது. வேத பாராயணம், மகா கணபதி பூஜை, பஞ்ச கவ்ய பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, 7ம் தேதி அங்குரார்ப்பணம், கலச ஆவாஹனம், பத்ரகாளி மூல மந்திர ஹோமம், முதல்கால பூர்ணாஹூதி நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம், கோபூஜை, வேதிகார்ச்சனை, பத்ரகாளி மூலமந்திர ஹோமம், கோபுரத்துக்கு கலசம் வைத்தல், இரண்டாம்கால பூர்ணாஹூதி பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை 4.00 மணிக்கு மங்கள இசையுடன் பூஜைகள் துவங்கின. பலவித பழங்களின் ஹோமம், 108 மூலிகை ஹோமங்களும், நாடி சந்தானம் எனும் உயிர்க்கலை கொடுக்கும் நிகழ்வுகளும், யாத்ரா சங்கல்பம், யாத்ரா தானம், கோதானம், சொர்ணதானம் ஆகிய நிகழ்வுகள் நடந்தன. காலை 6.05 மணிக்கு, மங்கள இசை முழக்கத்துடன், பஞ்சவர்ண குடை நிழலில், கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டன. ஸ்ரீதத்தகிரி ஸ்வாமிகள் சாம்பசிவ ரிஷீஸ்வரர், காலை 6.15 மணிக்கு, கோபுர கலசம் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, 6.40 மணிக்கு ஸ்ரீஅதர்வன பத்ரகாளி தேவி சிலைக்கு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விநாயகர், முருகன், ராகு-கேது புடைசூழ காட்சி தரும் சிவலிங்கம், காக்கை வாகனத்தில் அமர்ந்த நிலையில் உள்ள சனி பகவான் ஆகியோருக்கும் கும்பாபிஷேம் நடந்தது.
பட்டு பீதாம்பரங்கள் அணிவித்து அலங்காரம் செய்து, காலை 6.45 மணிக்கு பிரத்யங்கிரா தேவிக்கு மகா தீபாராதனை நடந்தது. திரளாக கூடியிருந்த பக்தர்கள், "ஓம்சக்தி பராசக்தி கோஷத்துடன், தேவியை வழிபட்டனர். நம்பியூர் சிவஞான சிவாச்சாரியார் குழுவினர் கும்பாபிஷேக நிகழ்வை நடத்தினர். அதன்பின், அன்னதானம் நடந்தது. இன்று முதல் 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் நடக்கின்றன.