மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் தலமான இங்கு செல்வமுத்துக் குமார சுவாமி தனிசன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். செல்வ முத்துக்குமாரசுவாமிக்கு ஆண்டு தோறும் தை மாதம் 10நாட்களுக்கு திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு தை திருவிழா கடந்த 2 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான புஷ்ப தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி நேற்று தேர் பூக்கலால் அலங்காரம் செய்யப்பட்ட வள்ளி, தெய்வானையுடன் செல்வமுத்துக்குமார சுவாமி தேரில் எழுந்தருளினார். 10 மணிக்கு தருமபுரம் ஆதின கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் பக்தர்கள் தேரைவடம் பிடித்திழுத்தனர். இதையடுத்து தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது. இன் று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.