பதிவு செய்த நாள்
13
பிப்
2014
10:02
திருச்சி: ஸ்ரீரங்கத்தில், தைத்தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், தைத்தேர் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் நடந்தது. அதிகாலை, 3:30 மணிக்கு, நம்பெருமாள் உபயநாச்சியர்களுடன் புறப்பட்டு அதிகாலை, 4:00 மணிக்கு ரங்கா, ரங்கா கோபுரம் எதிரே, தைத்தேர் மண்டபத்தை அடைந்தார். மாலை, 5:15 மணிக்கு மகர லக்னத்தில் சிறப்பு தீபாராதனையுடன் தேரில் எழுந்தருளினார். காலை, 6:30 மணிக்கு, பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். "கோவிந்தா, "ரங்கா கோஷங்கள் எழுப்பியபடி பக்தர்கள் தேரை இழுத்துச்செல்ல, மேற்கு, வடக்கு, கிழக்கு உத்தரவீதிகள் வழியாக நிலையை அடைந்தது. பத்தாம் நாளான இன்று, சப்தாவரணம் நிகழ்ச்சியும், 11ம் நாளான நாளை நம்பெருமாள், ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்திருவீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ரங்கா, ரங்கா கோபுரம் அருகே உள்ள போலீஸ் புறக்காவல் நிலையத்தையொட்டி, சில நாட்களுக்கு முன், குழாய் பதிக்கும் பணிக்காக, மாநகராட்சி குழிதோண்டியது. அந்த குழியை சரியாக மூடாததால், தேர் சக்கரம் குழியில் சிக்கியதில் தேர் குலுங்கியது. இதனால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்து, "ரங்கா என, அபயக்குரல் எழுப்பினர். ஜாக்கி வைத்து தேர் நிலை நிமிர்த்தப்பட்டது. இதனால், 45 நிமிடம் தேரோட்டம் பாதிக்கப்பட்டது.