பதிவு செய்த நாள்
13
பிப்
2014
10:02
கம்பம்: கம்பம், கம்பராயப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தில், பக்தர்கள் "கோவிந்தா என்ற கோஷம் எழுப்பி, வழிபட்டனர். தேனி மாவட்டம் கம்பம், கம்பராயப் பெருமாள் கோயில் திருப்பணிகள், ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை மேலாண்மை இயக்குனர் ரா.பாஸ்கர் சார்பில், ரூ. 60 லட்சத்தில் நிறைவு பெற்றது. கோயிலின் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று காலை, கோ பூஜை, சுப்ரபாதம், புண்யாக வாசனம், துவார பூஜை, பாலிகை பூஜை, கும்ப திருவாராதனம், பஞ்ச சுத்த ஹோமம், வேத விண்ணப்பம், நான்காம் கால யாக சாலை துவக்கம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. காலை 10:15 மணிக்கு, கடம் புறப்பட்டது. வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, பெருமாள், விமானம், சால கோபுரம், ஆழ்வார், ஆச்சாரியார், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், தாயார் சன்னதி மற்றும் பரிவார மூர்த்திகளின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்ற, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் "கோவிந்தா என்ற கோஷம் எழுப்பியபடி, கும்பாபி?ஷகத்தை தரிசித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், ரெங்காச்சாரி பட்டாச்சாரியார் தலைமையில், 35 வேத விற்பன்னர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். ராமலிங்கம் பிள்ளை டிரஸ்ட் மேலாண்மை இயக்குனர் ரா.பாஸ்கர், அவரது துணைவி ரமணி, அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், தக்கார் சுரேஷ், கோயில் செயல் அலுவலர் விஸ்வநாத், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., தங்க தமிழ்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், ரத உற்சவ கமிட்டி தலைவர் டி.கே.நடராசப்பிள்ளை உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வட்டமிட்ட கருடன்கள் : காலை 10:15 மணிக்கு, கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்த, கடம் புறப்பாடு துவங்கிய போது, கோபுரத்திற்கு மேல் 2 கருடன்கள் வானில் வட்டமிட்டன. இதைக் கண்ட பக்தர்கள், "கோவிந்தா.. கோவிந்தா... என முழங்கினர்.