பதிவு செய்த நாள்
13
பிப்
2014
12:02
விருத்தாசலம்: ஆங்கிலேயே கலெக்டர் ஹைட்துரை வழங்கிய தேர்சங்கிலியால் 200 ஆண்டுகளாக நடக்கும் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேர் திருவிழா நாளை நடக்கிறது. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் விபச்சித்து முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சோழ, பல்லவ, பாண்டிய மன்னர்கள், நாயக்கர்களால் திருப்பணி செய்யப்பட்டது. இக்கோவில் ஐந்து கொடிமரம், ஐந்து தேர், ஐந்து திருவிழா, ஐந்து பிரகாரம், ஐந்து நந்தி, ஐந்து தீர்த்தம், ஐந்து கோபுரம், பஞ்ச லிங்கம், திருவிழாக்கள் என ஐந்தின் சிறப்புகள் பெற்றது. ஐந்து திருவிழாவில் மாசிமாதத்தில் 12 நாட்கள் நடக்கும் மாசி மகப் பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த 6ம் தேதி காலை 9:00 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கி தினமும் சிறப்பு அபிஷேகம், சுவாமிகள் வீதியுலா நடந்தது. அதில், 6ம் நாள் விழாவில் இக்கோவிலை பிரதிஷ்டை செய்த விபச்சித்து முனிவருக்கு விருத்திகிரீஸ்வரர் காட்சி தரும் சிறப்பு மிக்க நாளாகும். 9ம் நாள் விழாவான மாசி மக பிரமோற்சவம் நாளை காலை 7 மணியளவில் விநாயகர், சுப்ரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் ஐந்து தேர்களில் வீதியுலா வரும்.
இதற்காக, கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கோவில் விழாக்குழுவினர், தேர்களை செப்பனிடம் பணிகளை மேற்கொண்டனர். இத்தேர்கள் இயக்கத் தகுதிச் சான்றை பொதுப்பணித் துறை வழங்குவது வழக்கம். ஆயிரக்கணக்கானோர் கூடி வடம்பிடித்து இழுக்கும் இத்தேர்களில் இரும்புச் சங்கிலிகள் இணைக்கப்பட்டுள்ளது. இவைகள், 1813ம் முதல் 1826 வரை கடலூர் மாவட்ட கலெக்டராகப் பணியாற்றிய ஆங்கிலேயே அதிகாரி சார்லஸ் ஹைட் துரை என்பவரால் வழங்கப்பட்டன. மேலும், கும்ப ஆரத்தி செய்ய வெள்ளிக் குடமும் வழங்கியுள்ளார். மேலும், இக்கோவிலின் கைலாசப் பிரகாரத்தில் கருங்கற்களால் தளவரிசை அமைத்து, தளவரிசை கற்கள், தேர்செயின்களில் ஹைட் என்ற தனது பெயரை பொறித்து,ஹைட் தளவரிசை ஹைட் செயின் என பெயர் வைத்துள்ளார். கடலூர் மாவட்ட ஆங்கில வரலாற்றில்(கெசட்) உள்ளதாக தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயே அதிகாரி வழங்கிய தேர் சங்கிலிகள் தான் ஆண்டுதோறும் ஐந்து தேர்களையும் இயக்க பயன்பட்டு வருகிறது.