பதிவு செய்த நாள்
15
பிப்
2014
10:02
பழநி: பழநி திருஆவினன்குடிகோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கப்பட்டு பலமாதமாகியும், இதுவரை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. முருகப்பெருமானின், மூன்றாம்படை வீடு என அழைக்கப்படும், பழநி திருஆவினன்குடிகோயிலில், 2013 ஜூலையில், சிறப்பு பூஜை செய்து, கும்பாபிஷேக பணி துவங்கியது. ரூ.90 லட்ச ரூபாய் செலவில், கோயில் கோபுரங்கள் சிலைகள், ஓவியங்கள் புதுப்பிக்கப்படுகிறது. வெளிப்பிரகாரத்தில் நிழற்கூரை அமைக்கப்படுகிறது. இருப்பினும், ராஜகோபுரத்திலுள்ள, சிலைகளை புதுப்பித்து, வர்ணம் பூசுவதற்காக, சாரம்கட்டி பலமாதங்கள் ஆகியும் இதுவரை பணிகள் எதுவும் நடக்காமல், துணிகள் கிழிந்து, கோபுரத்தில் தொங்குவது பக்தர்களை சங்கடத்திற்கு ஆளாக்குகிறது. இதனால் கோபுரதரிசனம் செய்ய முடியாமல், பழநி வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில், திருஆவினன்குடிகோயிலில் தீர்த்தகாவடிக்கு புகழ்பெற்ற பங்குனி உத்திர விழா, ஏப்., 7 ல் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. ஆகையால், ராஜகோபுர மராமத்துபணி, புதுப்பிப்பு பணிகளை விரைந்து முடித்து, வர்ணம் பூச, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""கும்பாபிஷேக பணிகள் தொடர்ந்து நடக்கிறது. ராஜகோபுரத்தில் ஏற்கனவே வெள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கோயில் கீழ், மேல்தளத்தில் புதிதாக தளங்கள் அமைக்கபட்டுள்ளது. விரைவில் ராஜகோபுரத்திற்கு வர்ணங்கள் பூசும் பணி துவங்க உள்ளது, என்றார்.