பதிவு செய்த நாள்
27
பிப்
2014
11:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், இன்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில், மஹா சிவராத்திரி சிறப்பு பெற்றதாகும். இந்த ஆண்டு மஹா சிவராத்திரி விழா இன்று நடக்கிறது. அதிகாலை நடை திறக்கப்பட்டு ஸ்வாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. மேலும் மாலை, 4 மணி முதல் ராஜகோபுரத்தில் இருந்த மூன்றாம் பிரகாரம் வரை, அனைத்து இடங்களிலும், வண்ண பவுடர் கலந்த உப்புகளால், இறைவனின் திருக்காட்சி ஓவியங்கள் வரையப்படும். அதிகாலை, 5 மணி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. மாலை, 6 மணிக்கு கோவிலில் லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபடுவர். கோவில் வளாகம் முழுவதும், அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்படுவதால், அருணாச்சலேஸ்வரர் கோவில் ஒளி வெள்ளமாக காட்சியளிக்கும். நள்ளிரவு, 12 மணிக்கு கருவறையில், மேற்கு திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அப்போது, லிங்கோத்பவருக்கு தாழம்பூ அணிவிக்கப்படுவது விசேஷம். ராஜகோபுரம் வழியாக, பொது தரிசனம் கட்டண தரிசனம் அனுமதிக்கப்படுகிறது, விரைவாக, பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக, இரண்டு நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று காலை அரங்கத்தில், மாலை, 6 மணி முதல் இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், பொம்மலாட்டம், பக்தி சொற்பொழிவு நடக்கிறது. ராஜகோபுரம் எதிரில், 108 தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்கும் சிறப்பு இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.