பதிவு செய்த நாள்
01
மார்
2014
10:03
அவிநாசி:மகா சிவராத்திரியை முன்னிட்டு, அவிநாசி கோவிலில் விடிய விடிய பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு துவங்கி அதிகாலை வரை, பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.மகா சிவாரத்திரி விழா, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இரவு 8.00 மணிக்கு துவங்கிய கால பூஜை, இரவு 10.00 மணி, நள்ளிரவு 12.00 மணி, அதிகாலை 3.00 மணி, 5.00 மணிக்கு நிறைவடைந்தது. ஒவ்வொரு கால பூஜையின்போதும், சிவபெருமானுக்கு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வகை திரவியங்களினால், அபிஷேகம் செய்விக்கப்பட்டது. சிவாச்சாரியார்கள், நான்கு வேதங்களையும் பாராயணம் செய்ய, ஓதுவா மூர்த்தி மற்றும் சிவனடியார்கள் சிவபுராணம், திருமுறை பாட, ஒவ்வொரு காலத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அவிநாசி, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கூட்டம் அதிகளவில் கோவிலுக்கு வந்திருந்தனர். நீண்ட வரிசையில் மணிக்கணக்கில், காத்திருந்து எம்பெருமானை வணங்கிச் சென்றனர்.சிவனடியார்கள் நான்கு காலமும் சிவபூஜை செய்தனர். அடியார்கள் மற்றும் பக்தர்கள் விடிய விடிய "ஓம் நமசிவாய கூறி, சிவபுராணம், தேவாரம், திருவாசம் உள்ளிட்டவற்றை பாராயணம் செய்து கொண்டிருந்தனர். மகா சிவராத்திரியோடு பிரதோஷமும் இணைந்து வந்ததால், பக்தர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. சுவாமி தரிசன வசதிக்காக, மூங்கில் தடுப்பிலான வரிசையை, கோவில் நிர்வாகத்தினர் அமைத்திருந்தனர். கோவில் சபா மண்டபத்தில், பள்ளி மாணவியர்களின் நடன நிகழ்ச்சி மற்றும் நாதஸ்வர நிகழ்ச்சி விடிய விடிய நடந்தது. திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், பழங்கரை பொன்சோழீஸ்வர சுவாமி கோவில், கருவலூர் கங்காதீஸ்வரர் கோவில், சேவூர் வாலீஸ்வரசுவாமி கோவில், நடுவச்சேரி கோதைப்பிராட்டீச்சுர சுவாமி கோவில், குட்டகம், மொக்கனீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவலாயங்களிலும் சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது.