பதிவு செய்த நாள்
03
மார்
2014
12:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், திருவிழாவையொட்டி நடப்பட்ட கம்பத்திற்கு பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர். நாளை (4ம் தேதி)பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில்,தேர்த்திருவிழா ஆண்டுதோறும் 20 நாட்களுக்கும் மேலாக மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதுபோன்று, இந்தாண்டும் விமரிசையாக தேர்த்திருவிழா கடந்த 18ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி கோவிலில், சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்து வருகின்றன. தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் நடுதல் நிகழ்ச்சி கடந்த 25ம்தேதி இரவு 11:00 மணிக்கு நடந்தது. முன்னதாக, பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டிலுள்ள கரியகாளியம்மன் கோவிலில், திருக்கம்பத்துக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அங்கிருந்து பூஜிக்கப்பட்ட கம்பம் தெப்பக்குளத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின், சிறப்பு வழிபாட்டிற்கு பின், நவதானியங்கள் கட்டப்பட்டு, மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கம்பம் நடப்பட்டது. இதனையடுத்து, தினமும் பெண்கள் வரிசையில் நின்று, கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர். இதனால், மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தொடர்ந்து, நாளை (4ம் தேதி) இரவு 9:00 மணிக்கு பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து, விரதமிருக்கும் பக்தர்கள், ஒவ்வொரு பகுதியிலிருந்து கூட்டம் கூட்டமாக பூவோடு எடுத்து வந்து வழிபாடு செய்கின்றனர். மார்ச் 12ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், தேரோட்டமும் நடைபெறுகிறது. தொடர்ந்து, 14ம் தேதி வரை மூன்று நாள் வரை தேரோட்டம் நடைபெறும். 15ம் தேதி அம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், 17 ம் தேதி மகா அபிேஷகமும் நடைபெறுகிறது. விழாவையொட்டி, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.