கரூர் வெங்கமேடு வெண்ணெய் மலை மீது முருகன் கோயில் உள்ளது. இங்கு முருகப்பெருமான் வேல், மயில், வள்ளி, தெய்வானை இன்றி தனியே அருள்பாலித்துக் கொண்டிருக்கும் காட்சி மிகுந்த சிறப்புடையது. புதுக்கோட்டைக்கு அருகே ஒற்றைக்கண்ணூர் என்ற தலம் உள்ளது. இத்தலத்தில் உள்ள முருகன் திருக்கோயில் முதலாம் ஆதித்த சோழனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கு யானை வாகனராக காட்சி தருகிறார் முருகப்பெருமான். இவர் ஒரு கரத்தில் ஜபமாலை மற்றொரு கரத்தில் சின்முத்திரையுடன் அருள்புரிகிறார்.