பதிவு செய்த நாள்
13
மார்
2014
11:03
திருத்தணி : எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது.திருத்தணி, நேரு நகரில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், 11.50 லட்சம் ரூபாயில் திருப்பணிகள் நடைபெற்றன. மேலும், கோவில் வளாகத்தில், புதியதாக முனீஸ்வரர், எல்லையம்மன் மற்றும் விநாயகர் ஆகிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இக்கோவிலின் கும்பாபிஷேகம், கடந்த, 10ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதில் கோவில் வளாகத்தில், மூன்று யாக சாலைகள், 121 கலசங்கள் வைத்து நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. இந்த நிலையில், நேற்று காலை, 9:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. மேலும், மாலை, 5:00 மணிக்கு மூலவர் எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. இரவு, 7:30 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.